சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை 18,000 வளையல் வழங்கல்
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையை ஒட்டி நாளை சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 18 ஆயிரம் வளையல்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சேலம், சுகவனேஸ்வரர் கோவில், சொர்ணாம்பிகை அம்மனுக்கு ஆடி மாதத்தின் நான்கு வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீலலிதா த்ரீசதீ பாராயணம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. நாளை ஆடி அமாவாசையை ஒட்டி மாலை, 6 மணிக்கு, சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகையான உபசாரத்துடன் வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கல இசை முழங்க, 18 ஆயிரம் வளையல்கள் சாத்துபடி செய்யப்பட்டு, அன்னதானத்துடன் பிரசாதமாக வளையல்கள் வழங்கப்படுகிறது. மேலும், சுகவனேஸ்வரர், மகாநந்தீசுவரர், அதிகார நந்தீசுவரர், நிருத்த கணபதி, தட்சணாமூர்த்தி, வலம்புரி விநாயகர், கங்காள மூர்த்தி, சரஸ்வதி, கஜலட்சுமி, துர்காதேவி, ஆஞ்சநேயர், பைரவர், சூரியன் ஆகிய சன்னதிகளில் சாத்துபடி செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கட்டளைதாரர், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.