உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்கு சிலை வடிக்கும் பணி ஜரூர்: 3 அடி முதல், 15 அடி உயரம் வரை தயாரிப்பு!

விநாயகர் சதுர்த்திக்கு சிலை வடிக்கும் பணி ஜரூர்: 3 அடி முதல், 15 அடி உயரம் வரை தயாரிப்பு!

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல வடிவங்களில் சிலைகள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று முதல், 15 அடி வரை சிலைகள் பிரமாண்டமாக தயார் செய்யப்படுகிறது. நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு விழா, செப்டம்பர், 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பல வடிவங்களில் தயார் செய்யப்படும் சிலைகளை, பல்வேறு இடங்களில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக முன்பணம் கொடுத்து சிலைகளுக்கு பதிவு செய்துள்ளனர்.நாமக்கல், போதுப்பட்டி சாலையில், செல்வ விநாயகர் கலைக்கூடத்தில், விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு, களிமண் மற்றும் கிழங்கு மாவை பயன்படுத்தி, பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. அரை அடி முதல், 15 அடி உயரம் வரை இச்சிலைகள் தயாரிக்கப்படுகிறது. அரை அடி முதல், மூன்று அடி உயரம் வரை களிமண்ணால் செய்யப்படுகிறது. மூன்று அடிக்கு மேல், 15 அடி உயரம் வரை, கிழங்கு மாவை பயன்படுத்தி, சிலைகள் வடிவமைக்கப்படுகிறது. மேலும், மயில், அன்னம், சிங்கம், யானை, மோளம், ஆஞ்சநேயர் வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கும் நிலையில் தயாரிக்கப்படுகிறது. அதேபோல், பாம்பு மீதும், குழல் ஊதும் கிருஷ்ணன், ஆக்ரோசமாக நடனமாடும் நடராஜர் கோலத்திலும் வடிவமைக்கப்படுகிறது. இவற்றுக்கு மக்கள் மத்தியில், மிகுந்து வரவேற்பு உள்ளதால், ஏராளமான சிலைகள் வடிவமைக்கப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யும் சிலைகள், நாமக்கல் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து, சிலை வடிவமைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஏராளமான சிலைகள் வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்று மாதத்துக்கு முன்பே சிலைக்கு ஆர்டர் கொடுத்து முன் பணம் செலுத்துகின்றனர். அவர்கள் சொல்லும் வடிவங்களில் சிலைகள் தயார் செய்யப்படுகிறது. களி மண்ணில், 1,000 சிலைகளும், கிழங்கு மாவில், 200 சிலைகளும் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட சிலைகளுக்கு தற்போது, வண்ணம் அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிலைகள், 30 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் சிலைகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. மக்கள் தேவைக்கு ஏற்ப சிலைகள் தயார் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !