உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வஞ்சுலீஸ்ரர் கோவில் பிரம்ம தீர்த்த குளம்: தூர் வாரும் பணியில் 200 சிவனடியார்கள்!

வஞ்சுலீஸ்ரர் கோவில் பிரம்ம தீர்த்த குளம்: தூர் வாரும் பணியில் 200 சிவனடியார்கள்!

கரூர்: கரூரில் மிகவும் பழமை வாய்ந்த வஞ்சுலீஸவரர் கோவில் குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து, புனித குளமாக மாற்றும் வகையில், 200 சிவனடியார்கள் குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரில் மிகவும் பழமை வாய்ந்த வஞ்சுலீஸ்வரர் கோவில், பிரம்மா சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான பிரம்ம குளம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், குளம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தன. திருத்தொண்டர்கள் சபை, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில், குளத்தை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, கடந்த, 2013ம் ஆண்டு ஆகஸ்ட், 7ம் தேதி குளம் மீட்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. செடிக்கொடி, குப்பைகளால் குளம் மறைக்கப்பட்டு இருந்தன. குளத்தை தூய்மைப்படுத்தி, புனித குளமாக மாற்ற, திருத்தொடர் சபை, அனைத்து சிவனடியார் கூட்டமைப்பினர் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் சிவனடியார்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பிரம்மா தன் ஆணவத்தால் படைப்பு தொழிலை இழந்தார். காமதேனுவை சிவபெருமான் படைப்புத்தொழில் செய்ய பணித்தார். பிரம்மா தவற்றை உணர்ந்து சிவபெருமானிடம், தன் சாபத்தை நீக்க வேண்டினார். கரூவூர் திருத்தலத்தில் ஆனிலையப்பராக விளங்கும் என்னை வழிப்பட்டால், சபம் நீக்கும் என அருளினார். பிரம்மா, இத்தலத்துக்கு வந்து, வஞ்சுலீஸ்வரர் கோவிலுக்கு எதிரில் பிரம்ம தீர்த்த குளத்தை தோற்றுவித்து, தீர்த்தத்தில் தினமும் குளித்து சிவபெருமானை வழிப்பட்டார். அதன் பலனாக, மீண்டும் படைப்பாற்றலை சிவபெருமான் தந்தருளினார். பல நூறு ஆண்டுகளுக்கு முன், பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட குளம் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தது. திருத்தொண்டர்கள் சபை, அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு, அரசுத்துறை அதிகாரிகள் மூலம் கடந்த, 2013ம் ஆண்டு ஆய்வு செய்து குளம் மீட்கப்பட்டது. தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குளத்தை புனித குளமாக மாற்ற, 200 சிவனடியார்கள் சேர்த்து, தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு, ஐந்து லட்சம் ஏக்கர் பட்டா நிலங்கள், 1.5 லட்சம் ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், மூன்று லட்சம் ஏக்கர் சந்தேகம் அளிக்கும் வகையிலான நிலங்கள் உள்ளன. இதில், 70 சதவீத நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை தமிழகத்தில் மட்டும், 17 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில், அரசுத்துறை கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. அரசுத்துறை செயலாளர்கள், திருத்தொண்டர் திருச்சபை, அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பு கூட்டம் செப்டம்பர், 3ம் தேதி நடத்த உள்ளோம். கரூர் மாவட்டத்தில், 5,000 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்ரமிப்பில் உள்ளது. கோவில் நிலங்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், 16 ஆயிரம் கோவில்கள் சிதிலமடைந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கு உள்ளது, என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !