கர்மங்களும் பக்தியும்
1. வேதை: ஸர்வாணி கர்மாணி அபல
பரதயா வர்ணிதாநி இதி புத்வா
தாநி த்வயி ஆர்ப்பிதாநி ஏவ ஹி
ஸமநுசரந் யாநி நைஷ்கர்ம்யம் ஈச
மாபூத் வேதை: நிஷித்தே குஹசித்
அபி மந: கர்ம வாசாம் ப்ரவ்ருத்தி:
துர்வர்ஜம் சேத் அவாப்தம் தத் அபி
கலு பவதி அர்ப்பயே சித் ப்ரகாசே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வேதங்களில் கூறப்பட்ட கர்மங்கள் அனைத்துமே அந்தக் கர்மங்களைச் செய்வதன் மூலம் உண்டாகும் பயன்களின் மீது விருப்பம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை உணர்ந்து அந்தக் கர்மங்களை உன்னிடம் ஒப்படைத்தவனாக, அதன் பலனை எதிர்பாராமல், அவை மூலம் உண்டாகும் ஞானத்தை மட்டும் நான் அடைவேனாக, வேதங்கள் செய்யக்கூடாதவை என்று தடுத்துள்ள கர்மங்களைச் செய்ய எனது மனம், உடல், வாக்கு ஆகியவை உடன்படாது. அதனையும் மீறி அவை அக்கர்மங்களைச் செய்யும் என்றால் அந்தக் கர்மங்களையும் உன்னிடம் உனது ஒளி வீசும் ஞான ஸ்வரூபத்திடம் அர்ப்பணம் செய்து விடுவேன்.
2. ய: து அந்ய: கர்மயோக: தவ பஜ நமய:
தத்ர ச அபீஷ்ட மூர்த்திம்
ஹ்ருத்யாம் ஸத்வ ஏக ரூபாம் த்ருஷதி
ஹ்ருதி ம்ருதி க்வ அபி வா பாவயித்வா
புஷ்பை: கந்தை: நிவேத்யை: அபி ச
வீரசிதை: சக்தித: பக்தி பூதை:
நித்யம் வர்யாம் ஸபர்யாம் விததத் அயி
விபோ த்வத் ப்ரஸாதம் பஜேயம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை உபாஸிக்க பூஜை செய்வது என்பது ஒரு வகையான கர்மயோகம் ஆகும். அப்படி பூஜிக்க அழகாகவும், தூய்மையானதாகவும் ஒரு மூர்த்தியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மூர்த்தியானது கல், மண் ஆகியவற்றால் அமைத்தும் அல்லது மனதிலேயே அமைத்தும் இருக்கலாம். அந்த மூர்த்தியை த்யானம் செய்ய வேண்டும். பின்னர் தனது சக்திக்கு உட்பட்டு ஈட்டப்பட்ட செல்வம் மூலமாகவும், பக்தியினால் தூய்மை செய்யப்பட்டதாகவும் உள்ள மலர்கள், சந்தனம் ஆகியவற்றால் அன்றாடம் சிறந்த பூஜையைச் செய்ய வேண்டும். இப்படியாக உனது அருளை நான் பெறுவேன்.
3. ஸ்த்ரீ சூத்ரா: த்வத் ஆதி ச்ரவண விரஹிதா
ஆஸதாம் தே தயா அர்ஹா:
த்வத் பாத ஆஸந்ந யாதாந் த்விஜ குல
ஜநுஷ: ஹந்த கோசாமி அசாந்தாந்
வ்ருத்யர்த்தம் தே யஜந்த: பஹு கதிதம்
அபி த்வாம் அநாகர்ணயந்த:
த்ருப்தா வித்யா ஆபிஜாத்யை: கிமு
ந விதத்தே தாத்ருசம் மா க்ருதா மாம்
பொருள்: குருவாயூரப்பா! பெண்கள், சூத்திரர்கள் ஆகியோரில் சிலர் அவர்கள் அறியாமையாலும் வினைப்பயனாலும் உனது கதை, பெயர் முதலியவற்றின் மீது ப்ரியம் இல்லாமல் உள்ளனர். எனவே உனது கருணைக்கு அவர்கள் எப்போதும் உரியவர்கள்; நான் அவர்களைக் குறித்துக் கூறப்போவதில்லை. ஆனால் உனது திருவடிகளை உணர்ந்து விளங்கும் ப்ராமணர்கள், அரசர்கள், வைசியர்கள் ஆகியோர் மன அமைதி இன்றி உள்ளனரே! அவர்களைக் குறித்து நான் வருத்தம் அடைகிறேன். தங்கள் பிழைப்பிற்காக அவர்கள் யாகம் செய்கின்றனர். பலர் கூறியும் உனது பெருமைகளைக் கேட்பதில்லை. இவர்கள் தங்கள் படிப்பால் கர்வம் கொண்டவர்கள் ஆவர். அவர்கள் இதைவிட வேறு எதையும் செய்யத் துணிவார்கள். நீ என்னை அவர்களில் ஒருவனாக மாற்றி விடாதே!
4. பாப: அயம் க்ருஷ்ண ராம இதி அபிலபதி
நிஜம் கூஹிதும் துச்சரித்ரம்
நிர்லஜ்ஜஸ்ய அஸ்ய வாசா பஹு தர
கதநீயாநிமே விக்நிதாநி
ப்ராதா மே வந்த்ய சீல: பஜதி கில ஸதா
விஷ்ணும் இத்தம் புதாந்தே
நிந்தந்தி உச்சை: ஹஸந்தி த்வயி நிஹித மதீம்:
தாத்ருசம் மாக்ருதா மாம்
பொருள்: குருவாயூரப்பா! உனது உண்மையான பக்தர்களைக் கண்ட சில மனிதர்கள். இவன் தனது கெட்ட நடத்தையை மறைக்க இப்படி க்ருஷ்ணா, இராமா என்று பஜனை செய்கிறான். என்று கூறுகின்றனர். அவர்கள் மேலும், வெட்கம் இல்லாத இவர்கள் கூறுவதால் எனது முயற்சிகள் தடைபடுகின்றன. வீணாக பொழுதுபோக்கும் எனது சகோதரன் விஷ்ணுவை வணங்குவதாகக் கூறி வருகிறான் என்று கூறுகின்றனர். பரிகாசமும் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்களுள் என்னை நீ சேர்த்துவிடாதே!
5. ச்வேத ச்சாயம் க்ருதே த்வாம் முநி வர
வபுஷம் பரீணயந்தே தபோபி:
த்ரேதாயாம் ஸ்ருக் ஸ்ருவ ஆதி அங்கிதம்
அருணதநும் யஜ்ஞரூபம் யஜந்தே
ஸேவந்தே தந்த்ர மார்கை: விலஸத்
அரிகதம் த்வாபரே ச்யாமள அங்கம்
நீலம் ஸங்கீர்த்தந ஆத்யை: இஹ கலி
ஸமயே மாநுஷா: த்வாம் பஜந்தே
பொருள்: குருவாயூரப்பா! க்ருதயுகத்தில் உன்னை வெண்மை நிறம் உடைய ப்ரம்மச்சாரி வடிவில் துதிக்கின்றனர். த்ரேதா யுகத்தில், ஸ்ருக் ஸ்ருவம் என்னும் யாகப் பொருட்களைத் தரித்து சிவப்பு நிறமாக உள்ள யஜ்ஞ புருஷனாக வழிபடுகின்றனர். துவாபரயுகத்தில் சக்கரத்தையும் கதாயுதத்தையும் ஏந்திய ச்யாமள நிறத்தவனாக உன்னை தந்திரங்கள் மூலம் வணங்குகின்றனர். கலியுகத்தில் நீலநிறமாக உன்னை உனது திருநாமங்களைக் கூறியபடி பஜனை மூலம் துதிக்கின்றனர்.
6. ஸோயம் காலேய கால: ஜயதி முரரிபோ
யத்ர ஸங்கீர்த்தந ஆத்யை:
நிர்யத்நை: ஏவ மார்கை: அகிலத ந
சிராத் த்வத் ப்ரஸாதம் பஜந்தே
ஜாதா: த்ரேதா க்ருத ஆதௌ அபி ஹி
கில கலௌ ஸம்பவம் காமயந்தே
தைவாத் தத்ர ஏவ ஜாதாந் விஷய விஷரஸை:
மா விபோ வஞ்சய அஸ்மாந்
பொருள்: குருவாயூரப்பா! முரன் என்ற அசுரனை அழித்த ப்ரபுவே! இப்படியாக (உனது நாம சங்கீர்த்தனத்தால்) கலியுகம் மிகவும் மேன்மையுடன் உள்ளது. மிகவும் எளிய முறையில், உனது நாம சங்கீர்த்தனத்தை மட்டுமே செய்து, மக்கள் உனது அருளை எளிதாகப் பெற இயல்கிறது. எனவே க்ருதயுகத்திலும், த்ரேதாயுகத்திலும் பிறந்த மனிதர்கள் மீண்டும் கலியுகத்தில் பிறக்க நினைக்கின்றனர் அல்லவா? நாங்கள் செய்த புண்ணியத்தினால் கலியுகத்தில் பிறந்துள்ளோம். எங்களை சிற்றின்பம் என்னும் அமிர்த வடிவில் உள்ள விஷத்தில் ஆழ்த்தி விடாதே!
7. பக்தா: தாவத் கலௌ ஸ்யு: த்ரமில
புவி தத: பூரிச: தத்ர ச உச்சை:
காவேரீம் தாம்ரபர்ணீம் அநு கில க்ருத
மாலாம் ச புண்யாம் ப்ரதீசீம்
ஹா மாம் அபி ஏதத் அந்தர்பவம் அபி ச
விபோ கிஞ்சித் அஞ்சத் ரஸம் த்வயி
ஆசா பாசை: நிபத்ய ப்ரமய ந பகவந்
பூரய த்வந் நிவேஷாம்
பொருள்: பகவானே! குருவாயூரப்பா! இந்தக் கலியுகத்தில் உனது பக்தர்கள் மிகவும் அதிகமாகவே உள்ளனர். திராவிட நாட்டில் அதிகமாக உள்ளனர். மேலும் குறிப்பாக காவிரி, தாமிரபரணி ஆகிய நதிகளின் கரைகளிலும், மேற்குத் திசையில் பாயும் நதிகளின் கரைகளிலும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர். இப்படிப்பட்ட இடத்தில் நான் பிறந்துள்ளேன். உன்னிடம் சிறிதாவது பக்தி உடையவனாக என்னை நீ மாற்ற வேண்டும். என்னை ஆசை மற்றும் பாசங்கள் என்னும் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டி விடாதே. எனக்கு உன்னிடம் உள்ள பக்தி என்றும் நிறைவாக இருக்க வேண்டும்.
8. த்ருஷ்ட்வா தர்ம த்ருஹம் தம் கலிம்
அபகருணம் ப்ராக் மஹீ க்ஷித் பரீக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருஷ்ட கட்க: அபிந
விநிஹிதவாந் ஸார வேதீ குண அம்ம்சாத்
த்வத் ஸேவா ஆதி ஆக ஸித்தயேத்
அஸத் இஹ ந ததா த்வத் பரே ச ஏஷ பீரு:
யத் து ப்ராக் ஏவ ரோக ஆதிபி:
அபஹரதே தத்ர ஹா சிக்ஷய ஏநம்
பொருள்: குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் கலிபுருஷன், தர்ம தேவதையை மிகவும் கொடுமைப்படுத்துவதை பரீட்சத்து என்ற அரசன் கண்டான். அவன் உடனே தனது வாளை உருவி கலிபுருஷனைக் கொல்ல முயன்றான். ஆனால் அந்த கலிபுருஷனின் நல்ல குணங்களைக் கண்ட அரசன் அவனைக் கொல்லாமல் விட்டான். இந்தக் கலியுகத்தில் உனது ஆராதனையும், தரிசனமும் கூடிய விரைவில் பலன் அளிக்கிறது. அதே நேரம் பாவங்கள் விரைவாக தீய பலனை அளிப்பதில்லை. கலிபுருஷன் உனது பக்தர்களைக் கண்டு அஞ்சியவனாக உள்ளான். எனவே மக்கள் உன்னை வணங்கி உனது அடிமை ஆவதற்கு முன்னரே அவர்களை நோய்கள் முதலானவற்றால் வருத்துகிறான். இதனால் மக்களைத் தடுக்கிறான். ஆகவே நீ அவனைத் தண்டிப்பாயாக!
9. கங்கா கீதா ச காயத்ரீ அபி ச துளஸிகா
கோபிகா சந்தனம் தத்
ஸாளக்ராம அபி பூஜா பரபுருஷ
ததா ஏகாதசீ நாமவர்ணா:
ஏதாநி அஷ்ட அபி அயத்நாந் அயி
கலி ஸமயே த்வத் ப்ரஸாத ப்ரவ்ருத்தயா
க்ஷிப்ரம் முக்தி ப்ரதாநீ இதி அபிதது:
ருஷய: தேஷுமாம் ஸஜ்ஜயேதா:
பொருள்: குருவாயூரப்பா! பரமபுருஷா! இந்தக் கலிகாலத்தில் பெரும் முயற்சி இல்லாமலேயே உனது அருளைப் பெற்றுத் தந்து, மோட்சமும் அளிப்பவை என்று எட்டு அம்சங்களை முனிவர்கள் கூறுகின்றனர். அவையாவன-கங்கை, பகவத்கீதை, காயத்ரி மந்திரம், துளஸி, கோபிசந்தனம், சாளக்கிராம ஆராதனை, ஏகாதசி விரதம் நாம சங்கீர்த்தனம் என்பவை ஆகும். எனக்கு இவற்றின் மீது ஈடுபாட்டை அளிப்பாயாக!
10. தேவ ருஷீணாம் பித்ருணாம் அபி ந புந:
ருணீ கிங்கர: வாஸ பூமந்
ய: அஸௌ ஸர்வாத்மநா த்வாம் சரணம்
உபகத: ஸர்வ க்ருத்யாநி ஹித்வா
தஸ்ய உத்பந்நம் விகர்ம அபி அகிலம்
அபநுதஸ்ய இவ சித்த ஸ்தித: த்வம்
தத் மே பாப உத்த தாபாந் பவந புர பதே
ருத்தி பக்திம் ப்ரணீயா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அனைத்து செயல்களையும் விடுத்து, உன்னையே சரணம் என்று புகுந்தவன் - தேவர்களுக்கோ, முனிவர்களுக்கோ, பித்ருக்களுக்கோ அடிமையாக, கடன்பட்டவனாக, வேலைக்காரனாக இருப்பதில்லை. நீ எப்போதும் அவன் மனதில் அமர்ந்து, அவனது தீயச் செயல்களால் உண்டாகும் பாவங்களையும், அவற்றால் உண்டாகும் துன்பங்களையும் நீக்க வேண்டும். உன்னிடத்தில் ஆழ்ந்த பக்தியையும் உண்டாக்க வேண்டும்.