விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
அரூர்: அரூர் பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும், 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புதன்சந்தை அருகே, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக, வைக்கப்பட்டுள்ளன. இங்கு வலம்புரி விநாயகர், பஞ்சமுக விநாயகர், நத்தன கணபதி, ராஜகணபதி உள்ளிட்ட, பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் உள்ளன. அரை அடி உயரம் முதல், 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் உள்ளன. 50 முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான விநாயகர் சிலைகள் உள்ளன. இதுகுறித்து சிலைகள் தயாரிக்கும், ஸ்தபதி குமரேசன் கூறியதாவது: அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு களிமண், கிழங்கு மாவு, பேப்பர் ஆகியவற்றை கொண்டு நீர் நிலைகளில் எளிதில் கரையும் வகையில் ஆகம விதிப்படி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ரசாயன பூச்சுகள் ஏதுமின்றி மாசுபடாத வகையில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. எங்களிடம், 300க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. தற்போது, விநாயகர் சிலைகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். சிலைகள் தயாரிக்கும் பணியில் கும்பகோணம், விழுப்புரம், கடலூர் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.