காளையார்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்!
காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று இரவு முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் செப்.,3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணி துவங்கியது. தினமும் பல்வேறு பூஜை நடந்தது. செப்டம்பர் 6ம் தேதி நேற்று இரவு 7 மணிக்கு சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி அம்பாள், சோமேஸ்வரர் சமேத சவுந்திரநாயகி அம்பாள், சுந்தரேஸ்வர் சமேத மீனாட்சி அம்பாள் உட்பட பரிகார தெய்வங்களுக்கு, சன்னதியில் சிவாச்சாரியார்கள் கடத்தில் புனித நீர் ஊற்றி கடம்ப ஸ்தாபன பூஜை செய்தனர். இரவு 8:15 மணிக்கு சன்னதியில் இருந்து கடம் புறப்பட்டு யாகசாலையில் எழுந்தருளியது.
யாகசாலையில் 34 குண்டங்கள் அமைத்து சிவாச்சாரியார்கள் வேள்வியுடன் முதல் காலயாகசாலை பூஜையை துவக்கினர். சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகம்: செப்டம்பர் 9ம் தேதி காலை 4:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை நடக்கும். காலை 6 மணிக்கு மேல் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கும். அதை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு பிரதான கடங்கள் புறப்பாடு நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு மேல் இரண்டு ராஜகோபுரம் உட்பட 25 விமானங்களில் உள்ள கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். அன்று மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். செப்டம்பர் 10ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் கும்பாபிஷேக விழா நிறைவு பெறுகிறது.