திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி!
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.மாலை உறியடி உற்சவம் தேரோடும் வீதியில் நடந்தது. பக்தர்கள் உறியடித்தனர். பின்னர் கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனை நடந்து, கோமாதா அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சிறுமிகளின் கோபியர் கோலாட்டம் பரதநாட்டியம் கிருஷ்ணன்-ராதை நடனம் நடந்தது. இரவில் கிருஷ்ணன் திருவீதி உலா நடந்தது.
*திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவி,பூதேவியர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சந்தானகிருஷ்ணரும்,பெருமாளும் திருநாள் மண்டபம் எழுந்தருளினர்.நள்ளிரவில் கண்ணன் பிறப்பு வைபவம் நடந்தது. தொடர்ந்து தானங்கள் வழங்கப்பட்டன. நேற்று மாலை உறியடி உற்சவம், கிருஷ்ணன்,பெருமாள் பல்லக்கில் பவன வருதல் நடந்தது.
* இளையான்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. தாயமங்கலத்தில் விளக்கு பூஜையும், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பொங்கல் வைத்து கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். சாத்தமங்கலத்தில் மாலை 6மணிக்கு பொங்கல் வைத்து சிறப்புபூஜை செய்தனர். ஏந்தலில் மாலை 5:30 மணிக்கு பொங்கல் வைத்து கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை செய்தனர். கண்ணமங்கலத்தில் மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலை 6மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. இரவு 7மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கொங்கம்பட்டியில் மாலை 5 மணிக்கு கிருஷ்ணருக்கு அபிஷேகமும், விளக்கு பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இரவு 8 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது. கலைக்குளம் ஊராட்சி பாச்சட்டியில் மாலை 5மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.