விநாயகர் சிலை பணிகள் திருப்புத்தூரில் மும்முரம்
திருப்புத்தூர்; திருப்புத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருப்புத்தூரில் ஆண்டு தோறும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் சதுர்த்தி ஊர்வலத்திற்காக தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டும் கடந்த செப்.,1 முதல் தென்மாப்பட்டு பகுதியில் சிலைகள் தயாரிப்புப் பணி துவங்கியுள்ளது. விழுப்புரம் ஆர்.சிவா,கே.முருகன் கூறுகையில், " ஆண்டிற்கு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்வோம்.மற்ற நேரங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள், மியூசியம் செட்,ராமர் சீதை, அஷ்டலெட்சுமி, தசாவதார பொம்மைகள் என்று ஆண்டு முழுவதும் செய்கிறோம். காகிதக் கூழ், ரசாயனம் இல்லாத சுற்றுச்சூழல் பாதிக்காத சிலைகளையே தயாரிக்கிறோம் என்றனர். இவர்களின் கை வண்ணத்தில் சிவன் பார்வதியுடன் விநாயகர், மூன்று முக விநாயகர்,சித்தி புத்தி விநாயகர், மூஞ்சுறு,மயில்,கஜ,சிம்மம்,ரிஷபம், அன்னம், கமலம்,நாகம், குதிரை என்று பல வாகனங்களிலும் விநாயகர் தயாராகிறார்.