தண்டு மாரியம்மன் கோவிலில் ரூ. 1.5 கோடியில் திருப்பணி!
கோவை: தண்டுமாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அம்மன் சிலை ஜலாதிவாசம் செய்யப்பட்டு, பாலாலய பூஜைகள் நேற்று நடந்தன. தண்டுமாரியம்மன் கோவில், புராதனமான பழமையான கோவில்களில் ஒன்று. பழமை வாய்ந்ததாக இருப்பதால் கோவில் கருவறை தனியாகவும், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை மிகவும் தாழ்ந்தும் உள்ளன. இது ஆகம விதிகளுக்கு முரணாக இருந்ததால், அறநிலையத்துறை முதன்மை ஸ்தபதி முத்தையா, தொல்லியல் துறை ஆய்வாளர் நரசிம் மன் ஆகியோர் கொண்ட குழுவினர், கோவிலை கடந்த ஆண்டு பல முறை ஆய்வுக்கு உட்படுத்தினர். கருவறையில் இருக்கும் அம்மன் பக்தர்களுக்கு தெளிவாக தெரியும் வகை யில் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதனடிப்படையில், கோவிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் முழுமையாக மாற்றியமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். 1.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்காக பக்தர்களிடமிருந்து நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு உபயதாரரும் ஒவ்வொரு திருப்பணியை ஏற்றுக்கொண்டுள்ளனர். திருப்பணிக்கு நிதி வழங்குவோர், கோவில் அலுவலகத்தில் நிதியை வழங்கி, அதற்கான ரசீதை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் சரவணன் வேண்டு கோள் விடுத்துள்ளார். நேற்று கோவில் அர்த்தமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவிலில் உள்ள சுவாமிகள் எழுந்தருவிக்கப்பட்டு, பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.