உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்துளசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பட்டத்துளசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ராசிபுரம்: ராசிபுரம், பட்டத்துளசி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சி.பி., கண்ணையா தெருவில் பட்டத்துளசி அம்மன் என்ற பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அர்த்த மண்டபம், விநாயகர், நந்தீஸ்வரர், அம்பாள் ஆகிய சிலைகள் புதிதாக அமைக்கப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா செய்ய முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை, விநாயகர் வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, முதல்கால யாக பூஜையும் நடந்தது. இதையடுத்து, கோபுர கலசம் வைத்தல், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு, பூர்ணாகுதியும் நடந்தது. தொடர்ந்து, காலை, 8 மணிக்கு கோபுர கலசத்துக்கும், பட்டத்துளசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மேலும், ஸ்வாமி சிறப்பு அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !