பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: தீர்த்தவாரி உற்சவம்!
திருப்புத்துார்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் செப்., 8ம் தேதி கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில், 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை காலை விநாயகர் வெள்ளி கேடகத்தில் வீதி உலா வந்தார். இரவு மூஷிக, கமல, ரிஷப, மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். செப்.,13ம் தேதி கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது. செப்.,16ல் தேரோட்டம் நடந்தது. அன்று முழுவதும் விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். சதுர்த்தி விழா: பத்தாம் நாளான நேற்று காலை 9 மணிக்கு கற்பக விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் கோயிலை வலம் வந்தனர்.கோயில் தெற்கு படித்துறையில் சுவாமி எழுந்தருளினர். பின்னர் அங்குசத்தேவருக்கு, பிச்சை சிவாச்சாரியார் அபிஷேகம் செய்தார். காலை 10:30 மணிக்கு சோமசுந்தரகுருக்கள், தீர்த்தவாரி நடத்தினார். பகல் 2 மணிக்கு 18 படி பச்சரிசியில் தயாரான மோதகத்தை மூலவருக்கு படைத்தனர். இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெற்றது. பரம்பரை அறங்காவலர்கள் அரு.நாராயணன் செட்டியார், வீர.முத்துக்கருப்பன் ஏற்பாட்டை செய்திருந்தனர்.