திருச்சியில் 5 கட்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!
திருச்சி: திருச்சியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்
சிலைகள், ஐந்து கட்டங்களாக விசர்ஜனம் செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகரப்பகுதியில், போலீஸ் அனுமதியுடன், 175 இடங்களிலும், புறநகர் பகுதியில், 883 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 18.9.15 முன்தினம் இரவு, புறநகர் பகுதியான துவரங்குறிச்சி, வளநாடு கைகாட்டி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 21 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பூதநாயகி அம்மன் கோவில் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
மணப்பாறை, திருவெறும்பூர், சோமரசம்பேட்டை, லால்குடி மற்றும் நவல்பட்டு பகுதிகளில்
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மாலை ஊர்வலமாக எடுத்துச்
செல்லப்பட்டு, காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. திருச்சி
மாநகரப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 175 விநாயகர் சிலைகளும், மாலை
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. அதே போல், முசிறி பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், 21ம் தேதியும், தொட்டியம் பகுதியில்
வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், 23ம் தேதியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவிரி
ஆற்றில் கரைக்கப்படுகிறது.
திருச்சி மாநகரில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, சிலை அமைப்புக்குழு சார்பிலும், போலீஸாரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 19.9.15 நடைபெறும் ஊர்வலத்துக்கு, மத்திய மண்டல ஐ.ஜி., ராமசுப்பிரமணி தலைமையில்,
2,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஊர்வலத்தை
முன்னிட்டு, திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.