திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் திறக்கப்படாமல் பாழாகும் வணிக வளாகம்!
காரைக்கால்: திருநள்ளார் நளன் குளம் அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், திறக்கப்படாமல் பாழாகி வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் உலகப் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பா லித்து வருகிறார். இக்கோவிலுக்கு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இக் கோவிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘கோவில் நகரம்’ திட்டத்தை புதுச்சேரி அரசு கொண்டு வந்தது. முதல் கட்டமாக, ரூ.75 கோடி மதிப்பில் பணிகள் துவக்கப்பட்டது. நளன் குளம் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
குளத்தை சுற்றி, பக்தர்கள் வசதிக்காக ரூ.3 கோடி மதிப்பில் உடை மாற்றும் அறை மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. ஆனால், புதிகாக கட்டப்பட்ட வணிக வளாகங்கள் இதுவரை வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படவில்லை. வியாபாரிகள் கூறுகையில், ‘நளன் குளத்தின் கரையை சுற்றி எண்ணெய், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறோம். பொதுப்பணித் துறை மூலம் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், டிக்கெட் கவுண்டர் போல் உள்ளது. இதில் 2 பேர் மட்டும்தான் நிற்க முடியும். பொருட்களை வைக்க முடி யாது. வணிக வளாகத்தை விரிவுபடுத்தி, வியாபாரிகளிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என கூறினர்.