தரிசாக உள்ள கோவில் நிலங்களை விற்க முடிவு!
புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நாட்களாக பயிரிடப்படாமல் தரிசாக உள்ள கோவில் நிலங்களை விற்பனை செய்து, வங்கியில் டிபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், 243 கோவில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து, பூஜைகளுக்கும், கும்பாபிஷேக திருப்பணிகளுக்கும் நிதியுதவி அளித்து வருகிறது.
கபளீகரம்: புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளபோதிலும், இவை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்த சொத்துக்கள் யாரிடம் இருக்கின்றன என தெரியவில்லை. கோவில் நிலங்களின் மீது முறையான கண்காணிப்பு இல்லாததால், பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
வழிகாட்டுதல்: இதற்கிடையில், புதுச்சேரியில் நகரம், புறநகர், கிராமங்களில், நீண்ட நாட்களாக பயிரிடப்படாமல் கிடக்கும் கோவில் தரிசு நிலங்களை விற்பனை செய்ய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, இந்து அறநிலையத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, பயிரிடப்படாமல் கிடக்கும் நிலங்களை விற்பனை செய்ய, கோவில் நிலங்களை கையாளும் அதிகாரிகள், அறங்காவலர் குழுக்கள் விரும்பினால், அது சம்பந்தமான சர்வே எண், நிலம் பற்றிய விபரங்கள் அடங்கிய கோப்பினை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இ-டெண்டர்: கோப்பினை பரிசீலித்து, நிலத்தை விற்பனை செய்வதற்கான பொது அறிவிப்பினை இந்து சமய அறநிலையத் துறை வெளியிடும். பொதுமக்கள், ஆட்சேபணை, ஆலோசனை தெரிவிக்கலாம். 30 நாட்களுக்குள் ஆட்சேபம் இல்லையென்றால், அரசிடம் ஒப்புதல் பெற இந்து சமய அறநிலைய துறை அனுப்பி வைக்கும். அரசு அனுமதி கிடைத்ததும், பொது அறிவிப்பு பகிரங்கமாக வெளியிடப்படும். கோவில் நிலம் விற்பனை செய்ய இ -டெண்டர் முறையில் ஏலம் விடப்படும்.அரசு வழிகாட்டி மதிப்பு அல்லது அதிக மார்க்கெட் தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு கோவில் நிலம் விற்பனை செய்யப்படும்.
டிபாசிட்: விற்பனை மூலம் கிடைத்த தொகை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கோவில் பெயரில் டிபாசிட் செய்யப்படும். அதில் கிடைக்கும் வட்டி தொகையை கோவில் வளர்ச்சி, செலவினங்களுக்கு கோவில் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளலாம். கோவில் வங்கி கணக்கை, அரசு ஒப்புதல் இல்லாமல் முடித்துக் கொள்ள முடியாது. டிபாசிட் பணத்தையும் எடுக்க முடியாது.
முன்னுரிமை: கோவில் நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டாலும், அரசு துறைகளுக்கு விற்பனை செய்யவே முன்னுரிமை அளிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. இதன்படி, கோவில் நிலம் விற்பனை குறித்து அனைத்து அரசு துறைகளுக்கும், சார்பு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேஷனுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தப்படும். இடம் தேவைப்படும் அரசு துறைகள், அரசு வழிகாட்டி மதிப்பின்படி பணத்தை செலுத்தி, கோவில் நிலத்தை வாங்கிக்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் கோவில் நிலத்தை வாங்க போட்டியிட்டால், எந்த துறைக்கு விற்பனை செய்வது என, அரசு முடிவு எடுக்கும்.