கோவையில் விநாயகர் ஊர்வலம்: 226 சிலைகள் கரைப்பு!
கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட, 226 சிலைகள் நேற்று குளங்களில் கரைக்கப்பட்டன.கோவை மாநகரில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பல்வேறு இடங்களில், 375சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, குறிச்சி குளம், குனியமுத்துார் குளம், சிங்காநல்லுார் குளம் மற்றும் முத்தண்ணன் குளங்களில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி நாளன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில், 226 சிலைகள் நேற்று காலை முதல் இரவு வரை முத்தண்ணன் குளம் மற்றும் சிங்காநல்லுார் குளங்களில் கரைக்கப்பட்டன. மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைகள் குளங்களில் கரைக்கப்பட்டன.விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, குளங்களில் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஊர்வலம் சென்ற பாதைகளில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. சிலைகளை குளங்களில் பாதுகாப்பாக கரைக்க, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.