கீழடி அகழ்வாராய்ச்சியை காண மக்கள் ஆர்வம்!
திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்பொருள் துறை கடந்த மார்ச் முதல் அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் கிடைத்த பொருட்களை வைத்து கீழடி பள்ளிச்சந்தை வணிக நகரமாக திகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு என தொல் பொருள்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு சான்றாக ரோமானிய எழுத்துகளுடன் கூடிய மண்பானை சிதறல்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் படங்களுடன் வெளியானது. செய்தியை கண்டு பல்வேறு <இடங்களில் இருந்து சிலர் அகழ்வாராய்ச்சி இடத்தை காண வந்திருந்தனர். திண்டுக்கல் சாவித்திரி: பண்டைய நகரை தினமலர் நாளிதழில் கலர் படங்களுடன் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன என செய்தி வந்ததில் இருந்து பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடத்தை காண வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. இங்கு வந்த பின் பழங்கால பொருட்களின் வரலாற்றை காணும் போது உண்மையிலேயே எங்களால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை, என்றார். சட்டீஸ்கரில் வசிக்கும் ராஜலட்சுமி கூறுகையில், ""தினமலர் வெப்சைட்டில் பண்டைய வணிக நகரம் கண்டறியப்பட்டுள்ளது என செய்தி வந்ததில் இருந்து எனக்கு அதனை காண ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு சொந்த ஊர் மதுரை. சட்டீஸ்கர் மாநிலத்தில் செட்டில் ஆகிவிட்டோம்.வணிக நகரை பார்க்கும் ஆர்வத்தில் வந்துள்ளேன், என்றார். மதுரை புவனேஸ்வரி கூறுகையில், ""இதுவரை கதைகளில், சினிமாக்களில்தான் பண்டைய மதுரை நகரை காண்பித்தார்கள். உண்மையிலேயே 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் மதுரை நகரம் இங்கு இருந்தது என்பது ஆச்சர்யம் தான், என்றார். திண்டுக்கல் தீபா கூறியதாவது: தினமலரில் முதன் முதலில் செய்தி வந்தபோதே பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது தான் சந்தர்ப்பம் அமைந்தது. இங்கு ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கம் அளித்தனர். அனைவரது சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர். பழங்கால பொருட்களை அடையாளம் காணுவது குறித்து தெளிவாக சொன்னார்கள். அந்தக்காலத்திலேயே பெண்கள் அழகை வெளிப்படுத்த கண் மை பயன்படுத்தியுள்ளனர். அந்த குச்சியை காண் பித்தனர், மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, என்றார்.