ஐயப்பன் பூஜா சங்கத்தில் அக்., 1 முதல் இசை விழா
கோவை: கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தின் மனோரஞ்சிதம் பிரிவின் சார்பில், நவராத்திரி மற்றும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, இசை விழா வரும் அக்., 1ம் தேதி துவங்குகிறது; அக்., 10ம் தேதி நிறைவடைகிறது. ஐயப்பன் பூஜா சங்கத்தின், கலை மற்றும் கலாசார பிரிவான, மனோரஞ்சிதம் துவங்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிந்து, வெள்ளி விழா கண்டுள்ளது. ஆண்டுதோறும் இசை கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், புதிய கலைஞர்களை ஊக்குவிக்கவும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு நவராத்திரி மற்றும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு வரும் அக்., 1 ம் தேதி இசை விழா துவங்குகிறது. தொடர்ந்து, அக்., 10ம் தேதி வரை நடக்கிறது. கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு கலைஞர்கள் அபர்ணா, திவ்யா, அம்ரிதா, மல்லடி சகோதரர்கள் ஸ்ரீராம்பிரசாத், ரவிக்குமார், காயத்ரி உள்ளிட்ட பலர் தங்களது இசை நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். இதுதவிர, கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ஐயப்பன் பூஜா சங்க வளாகத்தில், மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்க உள்ளன. நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.