நாளை பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு கொடி ஊர்வலம்
கீழக்கரை: பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 114ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் செப்., 20 ல் நடந்தது. இன்று மாலை முதல் இரவு 10 மணிவரை மவுலீது எனும் புகழ்மாலை ஓதும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(அக்.,1) அதிகாலை 3 மணியளவில் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து மேளதாளங்கள், வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகள் வழியாக குதிரை, யானை முன்னே செல்ல அலங்கரிக்கப் பட்ட சந்தனக்கூடு தேரில் கொடி ஊர்வலம் புறப்பட்டு தர்காவை வந்தடையும். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடைபெறுகின்ற விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்க உள்ளனர். ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் எஸ்.செய்யது இபுராம்சா, துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, பொருளாளர் ஹபிபு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், தொழிலதிபர் சிங்கம் பசீர், ஒன்றியக்கவுன்சிலர் ஹபிபுல்லா, பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.