விளாச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகள்!
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு மொம்பைகள் தயாரிக்கும்பணி மும்முரமாக நடக்கிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் களிமண், சிமென்ட், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகிதகூழ் ஆகியவற்றால் சீசனுக்கு தகுந்தாற்போல் 3 அங்குலம் முதல் 15 அடி உயர சுவாமி சிலைகள், பொம்மைகள் தயாரிக்கின்றனர். தற்போது நவராத்திரி வர இருப்பதால் அங்கு கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. பந்துலு உடையார் கூறுகையில், 3 ஆண்டுகளாக களிமண்ணால் மொம்பைகள் தயாரிக்கிறோம். இந்த ஆண்டு புதிய வடிவங்களில் மீனாட்சி தேர், பாலாம்பிகா தேர், ராமர், சிவன், நரசிம்மர் உள்ளிட்ட பல்வேறு புதிய சுவாமி சிலைகள் செய்துள்ளோம். கூலி ஆட்கள், களிமண் பற்றாக்குறை இருந்தாலும், கடந்த ஆண்டு விலைகளிலேயே இந்த ஆண்டும் விற்பனை செய்கிறோம். இங்கு தயாராகும் சிலைகள் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடாகாவிற்கும் செல்கிறது என்றார்.