ராமேஸ்வரம் கோயில் வளர்ச்சிக்காக
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் வளர்ச்சிக்காக "மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் கோயில், நகர் பிரச்னைகள் குறித்து தினமலர் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. சேவார்த்திகளின் சிலர் தொடர்ந்து வழக்கால், ராமேஸ்வரம் நகர் மற்றும் ராமநாதசுவாமி கோயில் மேம்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி உலா வாகனங்கள், தேர், வெள்ளி கதவுகளை புதுப்பிட்டுள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் கோடிதீர்த்தம் குளித்து பக்தர்கள் வெளியேறும் பகுதியில் ஆன்மிகத்திற்கு முரணாக பூட்டப்பட்ட கதவு நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. ராமேஸ்வரம் நகர் மேம்பாடு குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் அக்னிதீர்த்த கடற்கரை, ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தீர்த்தமாடும் பகுதிகள், பிரகாரங்கள், சுவாமி அம்பாள் சன்னதி, தங்க,வெள்ளி வாகனங்களை பார்வையிட்டார். கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், ராமேஸ்வரம் தாசில்தார் கணேசன், டி.எஸ்.பி., மணிவண்ணன், நகராட்சி கமிஷனர் முஜூபுர் ரகுமான், இன்ஜினியர் ரெத்தினவேலு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதியம் கோயிலில் பக்தர்களுடன் அன்னதானம் சாப்பிட்ட பின், அவர் கூறியதாவது: கோர்ட் உத்தரவுபடி ராமேஸ்வரம் நகர் வளர்ச்சிக்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான முதல் ஆய்வுப்பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் கருத்தறிந்து திட்டம் தயாரிக்கப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். இங்கு, ஏற்கனவே பலகோடி மதிப்பில் நகர் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்களின் தேவைக்கேற்ப கழிப்பறைகள் ஏற்படுத்தப்படும். அக்னிதீர்த்த கடலில் சாக்கடை கலக்காமல் இருக்க, கடற்கரையில் கட்டப்பட்டுவரும் சுத்திகரிப்பு தொட்டிகள் இரண்டு வாரங்களில் செயல்படும். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு வாரத்தில் பேட்டரி கார்கள் இயக்கப்படும். கோயிலில் தீர்த்தமாடும் பகுதிகள் சீரமைக்கப்படும். ஆடி அமாவாசைக்கு அதிகளவில் வரும் பக்தர்கள், பிரச்னையின்றி தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.