மதுரையை மையமாக வைத்து சுற்றுலா துவக்க எதிர்பார்ப்பு!
மதுரை: புராதன, வரலாற்று தலங்களை சுற்றி இடம் பெற்றுள்ள மதுரையை மையமாகக் கொண்டு ஆன்மிக சுற்றுலா துவக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம், திருப்பட்டூர், சமயபுரம், பிரம்மா கோவில் மற்றும் பஞ்சவடி, திருவந்திபுரம், திருக்கோவிலுார் ஆகிய இடங்களுக்கு இரு ஆன்மிக சுற்றுலா திட்டங்களை அக்., 17 வரை நடத்துகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மதுரையை சுற்றி திருப்பரங்குன்றம், அழகர்கோவில், சோலைமலை, திருமோகூர், நரசிங்கம், திருவாதவூர், சோழவந்தான் குருவித்துறை போன்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. யானைமலை, நாகமலை போன்ற மலைகளில் சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குடவறை கோயில்கள் உள்ளன. மதுரையை சுற்றிய திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஆன்மிக, சுற்றுலா தலங்கள் உள்ளன. மார்ச், ஏப்ரல், நவம்பர், டிசம்பரில் ஏராளமான உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த இடங்களை ஒருங்கிணைத்து சுற்றி வரும் வகையில் ஒரு நாள், இரு நாள் சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே மதுரையை மையமாக வைத்து கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காரைக்குடிக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா துவக்க ஆய்வுகள் நடந்தன. ஆனால் இத்திட்டம் துவக்கப்படவில்லை. டில்லி, சென்னை போன்ற நகரங்களில் அந்தந்த சுற்றுலா கழகம் சார்பில் உள்ளூர் சுற்றுலா திட்டங்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு உள்ளது. மதுரையில் ஏற்கனவே சுற்றுலா வளர்ச்சி கழகம் கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயண திட்டத்தை செயல்படுத்தியது. நிர்வாக காரணங்களால் திட்டம் நிறுத்தப்பட்டது. எனவே மதுரையை மையமாக வைத்து ஆன்மிக சுற்றுலா திட்டங்களை துவக்க சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும்.