உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில் நிலங்களை காப்பாற்ற நடவடிக்கை!

பொள்ளாச்சி கோவில் நிலங்களை காப்பாற்ற நடவடிக்கை!

பொள்ளாச்சி: கோவில் சொத்துக்களை காப்பாற்றும் நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட நிலங்களில் அறிவிப்புப்பலகைகள் வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை, பொள்ளாச்சி, சூலக்கல், புரவிபாளையம், கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. சிறிய, பெரிய கோவில்கள் வித்தியாசமின்றி, அக்கால அரசர்கள், ஜமீன்தார்கள், பெரும் நிலச்சுவான்தார்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை, கோவில்களுக்கு தானமாக வழங்கியுள்ளனர். இந்நிலங்கள் கோவில் பூசாரிகளின் கட்டுப்பாட்டிலும், தொடர்ந்து நிர்வாக கமிட்டியின் பொறுப்பிலும் விடப்பட்டிருந்தன. நாளடைவில், இச்சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலத்தை, கோவில் வருமானத்துக்காகவும், பராமரிப்புக்காகவும் பொதுமக்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான கோவில் நிலங்கள் இன்னும் ஆரம்பகால குத்தகை தொகையிலேயே பலரது கட்டுப்பாட்டில் உள்ளது.

சமீபகாலமாக, இந்நிலங்களை தனியார் நிறுவனங்கள் சில, வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஒரு சிலர் குத்தகை நிலம் என்பதையே மறந்து, பல வகை மரங்களையும், தென்னைகளையும் நட்டுள்ளனர். சிலர் தோப்பாக மாற்றி பராமரித்து வருகின்றனர். இவற்றில், பெரும்பாலான நிலங்களுக்கு முறையான குத்தகைகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு அறங்காவல் துறையில் இருந்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அதிகாரிகள் ஆச்சரியப்படும் வகையில், கோவில் நிலங்கள் அடியோடு உருமாற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. விரைவில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கிடையில், கோவில் நிலங்கள் எங்கெங்கு உள்ளனவோ, அங்கெல்லாம், இது குறிப்பிட்ட கோவிலுக்கு சொந்தனது என, அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளதாக அறங்காவல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவில் நிலத்தை சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு, இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !