நவராத்திரி இரண்டாம் நாள்!
நவராத்திரியின் இரண்டாம் நாளில் (செப்.14), அம்பாளை கவுமாரியாக அலங்காரம் செய்ய வேண்டும். அசுரர்களை சம்ஹாரம் செய்த இவளை அபயம், வரத ஹஸ்தம் கொண்டவளாகவும், பாச அங்குசம் ஏந்தியவளாகவும் அமைத்து வழிபட வேண்டும். செம்மண் காவியோடு அரிசிமாவில் கோலமிட்டு முல்லை, துளசி மலர்களால் கவுமாரியை அர்ச்சிக்க வேண்டும். இவளைக் கல்யாணி ராகத்தில் கீர்த்தனை பாடி வழிபட்டால் நோய்நொடி நீங்கி ஆரோக்கியம் மேம்படும். மதுரை மீனாட்சி நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். குமரகுருபரர் மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் நூலை மன்னர் திருமலை நாயக்கர் முன்னிலையில் அம்மன் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். அதில் ’தொடுக்கும் கடவுட் பழம்பாடல்’ என்னும் பாடலைக் குமரகுருபரர் பாடிய போது, அம்பிகையே சிறுமியாக வந்து மன்னரின் கழுத்தில் இருந்த முத்து மாலையை அவருக்குப்பரிசளித்து மறைந்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சி ஊஞ்சல் ஆடும் அழகைப் போற்றிப் பாடியுள்ளார். அந்த தெய்வீக காட்சியை நாமும் பெற வேண்டும் என்பதற்காக நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருள்கிறாள்.
நைவேத்யம் : எலுமிச்சை சாதம்
பாடல்
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே
ஆலவாய் க்ஷேத்திர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜகத் ஜனனி நீயே
வைகைத் தலைவியே சரணம் தாயே.