உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு தசரா திருவிழா இன்று கோலாகல துவக்கம்!

மைசூரு தசரா திருவிழா இன்று கோலாகல துவக்கம்!

மைசூரு: உலக பிரசித்தி பெற்ற தசரா உற்சவம், இன்று காலை 11:05 மணிக்கு, மைசூரு
சாமுண்டி மலையில், சாமுண்டீஸ்வரி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து துவக்கப்படுகிறது.
விவசாயி புட்டய்யா, தசரா திருவிழாவை துவக்கி வைக்கிறார்.

கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாலும், விவசாயிகளின் தற்கொலையாலும் தசரா திருவிழாவை, எளிமையாக கொண்டாட அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், மைசூரு நகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11:05 மணியில் இருந்து, 11:55 மணிக்குள்
சுபலக்னத்தில், சாமுண்டிதேவி கோவிலில், விவசாயி புட்டய்யா, தசரா விழாவை துவக்கி வைக்கிறார். இன்று மாலை 4:00 மணிக்கு, அரண்மனை வளாகத்தில் தசரா கலாசார நிகழ்ச்சிகளை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.

கலாசார நிகழ்ச்சிகள் பிற்பகல் 1:30 மணிக்கு, நாகனஹள்ளி விவசாய பயிற்சி மையத்தில், விவசாய தசராவை, விவசாயத் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா; மாலை 4:30 மணிக்கு, புட்டண்ணா பார்க்கில், மலர் கண்காட்சியை அமைச்சர் சிவசங்கரப்பா; மாலை, 5:00 மணிக்கு நடக்கும், புத்தக மேளாவை அமைச்சர் உமாஸ்ரீ; மாலை 5:30 மணிக்கு, நாடகமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியை, அமைச்சர் சீனிவாஸ் பிரசாத்; மாலை 6:30 மணிக்கு, சையாஜிராவ் சாலை பசுமை மண்டபத்தில், விளக்கு அலங்காரத்தை அமைச்சர் சிவகுமார் துவக்கி வைக்கின்றனர்.

தசராவை முன்னிட்டு, நாளை முதல், வரும் 20ம் தேதி வரை, டவுன் ஹால், ஜெகன்மோகன்
அரண்மனை, கலாமந்திர், அரண்மனை வளாகம் உட்பட, பல்வேறு இடங்களில் பலவகையான
கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதன்முறையாக விவசாயி ஒருவர், தசரா திருவிழாவை
துவக்கி வைக்கிறார். தசரா திருவிழாவுக்கு ஆண்டுதோறும் இதுவரை, 10 கோடி ரூபாய் வரை
செலவிடப்பட்டது. ஆனால், இம்முறை மாநில அரசு, தசராவுக்கு நான்கு கோடி ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கியது. பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஜம்பு சவாரிமற்றொரு பக்கம், அரச குடும்பத்தினர் நடத்தும் தனியார் தசரா நிகழ்ச்சியும் நடக்கிறது. யதுவம்சத்தின் இறுதி வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மறைவுக்கு பின், அவரது தத்து மகன், யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு, இது முதலாவது தசராவாகும். அக்., 23ல், அரண்மனையின் பலராமா நுழைவாயிலில், நந்தி பூஜை, ஜம்பு சவாரியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். அன்றிரவு, 7:00 மணிக்கு, பன்னி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில், கவர்னர் வஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

எதிர்பார்த்த புக்கிங் இல்லை தசரா சீசன் துவங்குவதற்கு முன்பே, மைசூரில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இது ஜனவரி வரை தொடர்ந்து நீடிக்கும். இந்தாண்டு தசரா திருவிழாவை, எளிமையாக நடத்த வேண்டும் என, அரசு அறிவித்தபோதே, மைசூரு ஓட்டல் உரிமையாளர்கள் இடிந்து போயினர். அதற்கேற்ப இதுவரை, ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளின் முன்பதிவு, 50 சதவீதத்தை கூட எட்டவில்லை என, ஓட்டல் உரிமையாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். இருப்பினும், அக்., 22 முதல், அக்., 25ம் தேதி வரை, தொடர்ந்து விடுமுறை விடப்படுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கை, ஓட்டல் அதிபர்களிடம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !