ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா!
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஞானானந்தா தபோவனத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில், மாணவிகளுக்கு பாரம்பரிய உடை வழங்கும் வைபவம் துவங்கியது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா, கடந்த 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு, கட ஸ்தாபனத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5:30 மணிக்கு ஸ்ரீசக்ர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்திரி மண்டபத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை நடந்தது. மாலையில், ஞானாம்பிகைக்கு சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. தபோவனத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரம் மாணவிகளுக்கு, பாரம்பரிய உடையான பாவாடை, சட்டை வழங்குவதற்கான திட்டப் பணிகள் துவங்கப்பட்டது. இதேபோல், 500 பெண்களுக்கு புடவை, ஜாக்கெட் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இவை அனைத்தும், விஜயதசமிக்கு முன்பாக, தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பெண்களுக்கு தைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை, தபோவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.