மேல்மலையனூர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்!
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், இம்மாதம் 18ம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேக விழாவில் ஐந்து லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்வேறு அரசு துறையினரும், தீவிரமாக செய்து வருகின்றனர்.
புராண பின்னணி: சிவபுராணத்தின் படி சரஸ்வதி தேவியின் சாபத்தினால் பித்து பிடித்து பார்வதி தேவியை விட்டு பிரிந்து அலையும் சிவபெருமானின் பித்து தெளிந்து சாபவிமோசனம் அடையும் புண்ணிய ஸ்தலமாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உள்ளது. புராண பின்னணி கொண்ட இந்த கோவிலில் உள்ள அம்மனை வணங்குவதால் தீய சக்திகளினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். நாளுக்கு நாள் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருப்பணிகள்: இக்கோவிலில் கடந்த 2001ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. எனவே மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து கடந்த ஒரு ஆண்டாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் பக்தர்களுக்கான வசதிகளையும், நெரிசலின்றி சாமி தரிசனம் செய்யவும் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் பாதையை 14 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் ஷெட், எற்கனவே உள்ள இரண்டு தங்கும் வளாகங்களின் தரை மற்றும் மேற்கூரையை 38 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பித்தல், பக்தர்கள் டிக்கெட் வாங்கும் வரிசை பகுதியை 46 லட்சம் ரூபாய் மதிப்பிலும் புதிதாக கட்டி வருகின்றனர். அத்துடன் கோவில் விமானம், மண்டபங்கள், பழைய கட்டிடங்கள் அனைத்தையும் புதுப்பித்துள்ளனர்.
கும்பாபிஷேகம்: திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், இம்மாதம் 18ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ள இந்த கும்பாபிஷேக விழா வரும் 15ம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்க உள்ளது. இதற்காக 105 அடி அகலம் 80 அடி நீளத்தில் ஆகம விதிகளின் படி யாகசாலை அமைத்துள்ளனர். இதில் 41 குண்டங்களை அமைத்து யாகம் நடத்த உள்ளனர்.
ஏற்பாடுகள் தீவிரம்: விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, வேலூர், புதுச்சேரி, கடலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தற்போது இயங்கி வரும் இரண்டு தற்காலிக பஸ் நிலை யங்களுடன், மேலும் ஈயகுணம் ரோட்டில் புதிதாக தற்காலிக பஸ்நிலையம் அமைக்கின்றனர். பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவும், இங்கு முகாம் அமைக்க உள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வழிகளில் மின்விளக்கு பற்றாக்குறையை சரி செய்ய புதிதாக மின் கம்பங்கள் அமைத்து விளக்கு வசதிகளை செய்ய உள்ளனர்.தற்போது கோவில் வளாகத்தில் உள்ள குடிநீர் வசதியுடன் 10 இடங்களில் சின்டெக்ஸ் டேங்குகளை அமைத்து குடிநீர் வழங்க உள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், பக்தர்கள் பாதுகாப்பிற்கு என 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினருடன் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளும், கோவில் அறங்காவலர்கள், பூசாரிகள் செய்து வருகின்றனர்.