பன்றிமலை பாச்சலூர் வந்த கதை!
தாண்டிக்குடி: தாண்டிக்குடி கீழ்மலையில் இயற்கை சூழ்ந்த மலைகளுக்கு மத்தியில் உள்ள பாச்சலுõரில் உள்ளது தரிசன லிங்கேஸ்வரர் ஆலயம். தாயை பிரிந்து தவித்த பன்றிகளுக்கு சிவபெருமான் பால் கொடுத்த திருவிளையாடல் இங்கு நடந்ததாக புராணம் உள்ளது.
புராண காலத்தில், குருவிருந்து துறையில் சகலவன், சகலை தம்பதியினர் இருந்தனர். செல்வந்தரான இவர்களின் 12 பிள்ளைகளும் ஒழுக்கசீலர்களாக வளரவில்லை. பெற்றோர் இறப்புக்கு பின் தான்தோன்றியாக திரிந்த இவர்கள், மதுரையில் தேவகுருவான பிரகஸ்பதி தவமிருக்கையில் இடையூறு செய்தனர். கோபமடைந்த தேவகுரு, நீங்கள் பன்றிகளாக பிறக்க கடவீர் என சாபமிட்டார். பின், சிவன் பன்றி உருவெடுத்து பால்கொடுத்தால் மட்டுமே சாபம் நீங்கும் எனத் தெரிவித்தார். மதுரையை ஆண்ட ராஜராஜ பாண்டியன் மலைப்பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்டபோது, பெரிய பன்றிகள் இறந்தன. பன்றிக் குட்டிகள் பசியால் துடித்ததையறிந்த மதுரை மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரிடம் முறையிட, அவர் தாய்ப்பன்றி உருவெடுத்து குட்டிகளுக்கு பால் கொடுத்தார். சாபம் நீங்கிய பன்றிகள், பின் மானிடர்களாக பிறந்தனர். பன்றிகள் போரிட்டு உயிர்துறந்த மலையை பன்றிமலையாகவும், சிவன் பால்கொடுத்த பால் செல்லுõர் எனவும் விளங்கி, அதுவே பாச்சலுõர் என்றானதாம். தரிசனலிங்கேஸ்வரர் கோயிலில் இன்றும் சத்தியக்கல் உள்ளது. கொடுக்கல், வாங்கல் உள்ளோர்,வாதி, பிரதிவாதி இருவரும் இங்கு முறையிடுவது வழக்கம். இங்குள்ள 45 அடி உயரமுள்ள கம்பத்தில் விசேஷ காலத்தில் விளக்கு ஏற்றுவர். காடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் பளிச்சிடும் இதைப் பார்த்து மற்ற கோயில்களில் விழா எடுப்பர்.