உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா துவங்கியது!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா துவங்கியது!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது.

நவ.,17 ல் சூர சம்ஹாரம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் துவங்கினர்.  முருக பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிக சிறப்பாக நடக்கும். இதில் உலகின் பல பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  

யாக சாலை பூஜை: காலை கந்தசஷ்டி விழா துவங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது.1.30 க்கு விஸ்வரூப தரிசனம், 2 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.10 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,12 க்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீர வாள் வகுப்பு பாடல்களுடன்,சண்முகவிலாசம் வந்தடைந்தார். அங்கு தீபாரதனை நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 க்கு விஸ்வரூப தரிசனம், 4 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 3.30 க்கு சாயரட்சை, தீபாரதனை நடக்கிறது.  

சூர சம்ஹாரம்: ஆறாம் திருவிழாவான நவ.,17 ல் ஜெயந்திநாதர் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவார்கள்.  ஏழாம் நாள் நவ.,18 ல் மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றுதல் நிழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.  

விரதம் துவக்கிய பக்தர்கள்: யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். பலர் கோயிலில் அங்கபிரதட்சனம் செய்து முருகனை வழிபட்டனர். இவர்கள் அனைவரும் சூர சம்ஹாரம் வரை கோயிலில் தங்கி விரதமிருந்து சூர சம்ஹாரம் முடிந்த பின்பு விரதத்தை முடித்து கொள்வார்கள்.  திருவிழா நாட்களில் கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் இணை கமிஷனர் வரதராஜன், நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !