சுவாமிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவில்,முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-வது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இந்த கோவிலில் தந்தைக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்து முருகன் திகழ்கிறார். சிறப்பு பெற்ற இந்த கோயிலில் நேற்று மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து வருகிற 27ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. கந்தசஷ்டியின் முதல்நாள் விழாவான, காலை 10.30 மணிக்கு சண்முகர், விக்னேஸ்வரர், நவ வீரர் மற்றும் பரிவாரர்களுடன் மலைக்கோயில்லிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றன.
அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் படிச்சட்டத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. வருகிற 17ம் தேதி காலை கந்தசஷ்டியின் 6-ம் நாள் திருவிழாவன்று சண்முகருக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனையும், ஆராதனையும் நடக்கிறது. அன்று மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், சூரசம்ஹாரமும் நடக்கிறது. பின்னர் தங்கமயில் வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் திருவீதிஉலாவும், தீர்த்தவாரியும் நடைபெறும். சூரசம்ஹாரம் நடைபெற்றபிறகு விக்னேஸ்வர பூஜையுடன் கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் எழுந்தருளளும், யாகசாலை பூஜையும், படிச்சட்டத்தில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது. 18ம் தேதி கார்த்திகை 2ம் திருநாளை முன்னிட்டு காலையில் படிச்சட்டத்திலும், இரவு இடும்ப வாகனத்திலும் சாமி வீதிஉலாவும், அன்று இரவு தேவசேனா திருக்கல்யாணமும் நடக்கிறது. வருகிற 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை, இரவு படிச்சட்டம், பல்லக்கு, பூத, ஆட்டுகிடா, வெள்ளிமயில், யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை போன்ற வாகனங்களில் சாமி வீதிஉலாவும், 25ம் தேதி காலை தேர் வடம் பிடித்தலும், இரவு 9.30மணிக்கு கார்த்திகை தீப காட்சியும் நடக்கிறது. வருகிற 26ம் தேதி காலை சாமி வீதியுலா மற்றும் காவிரியில் தீர்த்தவாரியும், 27ம் தேதி சாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.