உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது!

மருதமலையில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது!

கோவை: முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது. கோவையில் புகழ்பெற்ற கோவில்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு, கந்தர் சஷ்டி விழா மற்றும், தைப்பூசத்திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பின், காலை, 8:00 மணி முதல் யாக சாலை பூஜை, புண்யாகம், உள்ளிட்டவை செய்யப்பட்டு, இறை அனுமதி பெறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் சரண கோஷத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள், காப்பு கட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காப்பு கட்டும் பக்தர்கள், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காஹரம் வரை, ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பர். காலை கோவில் வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து காப்பு கட்டிச்சென்றனர். சஷ்டி விழாவையோட்டி, அடுத்த ஐந்து நாட்களுக்கும், முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் நிகழ்வு வருகின்ற, 17ம் தேதி மதியம், 2:45 மணிக்கு நடக்கிறது. இதில், முருகன் நான்கு சூரன்களை வதம் செய்கிறார். சூரசம்ஹாரத்தின் மறுநாள் காலை, முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !