திருப்பூர் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகல துவக்கம்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா, துவங்கியது. சிவனை தவிர யாராலும் அழிக்க முடியாத வரத்தை பெற்ற சூரபத்மன், தேவர்களை துன்புறுத்தினான். சிவ பெருமான், தனது நெற்றிக்கண்ணை திறந்து, ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகளை, கார்த்திகை பெண்கள் வளர்த்தனர்; பார்வதி தேவி அணைக்க, ஆறுமுகமும், 12 கரங்களுடன் கந்த பெருமானாக மாறினார். அதன்பின், தாயிடமிருந்து வேல் பெற்று, சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்வே, முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது.
சிவன்மலை: அருணகிரி நாதரால் பாடல் பெற்ற, பிரசித்தி பெற்ற தலம், சிவன்மலை. இங்கு, கந்த சஷ்டி விழா துவங்கியது. காலை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, காப்பு கட்டி, சஷ்டி விரதம் துவக்கினர். 16 வரை, காலை, 10:30 மற்றும் மாலை, 4:00க்கு, சிறப்பு அபிஷேகம், வீதி உலா நடக்கிறது. சூரசம்ஹாரம், 17ல் நடக்கிறது. அன்று காலை, 6:00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00க்கு, சூரசம்ஹார விழா நடக்கிறது. 18ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அலகுமலை: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுத பாணி சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில், துங்கியது. காலை, 7:30க்கு கணபதி ஹோமம், சுப்ரமணியர் ஹோமம் மற்றும் சுவாமி வேலுக்கு அபிஷேகம், கோமாதா பூஜை நடந்தன. கோவை பாலரிஷி பீடம், ஸ்வசிராசினி சுவாமிகள், கந்த சஷ்டி விரதம் துவக்கும் பக்தர்களுக்கு, காப்பு கட்டினார். தினமும் கந்த சஷ்டி கவச பாராயணம், கந்த குரு கவசம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும், 17ல், மாலை, 5:00க்கு சூரசம்ஹாரம்; 18ல், மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் பக்தர் பேரவை மற்றும் கந்த சஷ்டி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
கொங்கணகிரி கோவில்: கொங்கணகிரி வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீகந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 8:00 மணிக்கு கணபதி, சுப்ரமணியர் ஹோமம்; 9:30 மணிக்கு, கொடியேற்றம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. வரும், 17 வரை, தினமும் காலை, 9:30க்கு, திருசதை பாராயணம், கந்த சஷ்டி பாராயணம் நடக்கிறது. 17ம் தேதி, மாலை, 4:30க்கு, கந்த பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை; மாலை, 5:30க்கு, சூரசம்ஹார விழா நடக்கிறது. 18ம் தேதி காலை, 9:30க்கு, திருக்கல்யாணம் நடக்கிறது.
மங்கலம் ரோடு, பூச்சக்காடு, செல்வ விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள, முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா துவங்கியது. வரும், 17ம் தேதி காலை, 9:00க்கு, சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், சண்முகா அர்ச்சனை, அபிஷேகம் நடக்கிறது. 18ம் தேதி காலை, 9:30க்கு, திருக்கல்யாணம், விருந்து; மாலை, 5:00க்கு, வீதி உலா நடைபெறும்.
திருமுருகன்பூண்டி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிவில், கந்த சஷ்டி விழா துவங்கியது. ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கணபதி ஹோமம், சாந்தி ஹோமத்துக்குபின், பக்தர்களுக்கு சஷ்டி காப்பு அணிவிக்கப்பட்டது. கோவில் முத்து சிவாச்சார்யார் கூறுகையில்,17ல், சூரசம்ஹாரம்; 18ல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கந்த சஷ்டியில் விரதம் இருந்தால், எண்ணிய காரியம் கைகூடும், என்றார். அவிநாசி, பூண்டி வட்டாரத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு அணிந்து விரதத்தை துவக்கினர்.