அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா துவக்கம்
புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா ஆரம்பமாகியது. ஆகஸ்ட் 14ம் தேதி முடிய விழா தொடர்ந்து நடக்கிறது. அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்றுமுன்தினம் இரவு அம்மனுக்கு காப்புகட்டும் வைபவத்துடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் திருக்கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள், மாகாணத்தார்கள் மற்றும் அரசுத்துறையினர் சார்பில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அம்மன் வீதியுலா வருதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 3, 4 ஆகிய இருதேதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சர்வ அலங்காரத்துடன் வீரமாகாளியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இத்தேர்த்திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிக்கின்றனர். விழாவை முன்னிட்டு கோவிலைச் சுற்றி மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனை மற்றும் கண்காட்சி ஆகஸ்ட் மூன்றாம் தேதி முடிய தொடர்ந்து நடக்கிறது. இதில், மகளிருக்கான ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், செட்டிநாடு தின்பண்டங்கள், ஊறுகாய் வகை, நர்ஸரி மற்றும் மூலிகை செடி, மண்பாண்ட கலை பொருள், ஃபேன்ஸி பொருள், மசால் பொடி ஆகியவை விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான பொருட்களாக விற்பனை செய்யப்படுவதால் இவற்றை பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.