சிவன் கோயில்களுக்கு செல்லும் மெகா சைஸ் அகல் விளக்குகள்
மானாமதுரை: மானாமதுரையில் சிவன் கோயில்களுக்கு வழங்குவதற்காக மெகா சைஸ் அகல் விளக்குகள் தயாரித்து வருகின்றனர்.மானாமதுரையில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை திருநாளுக்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சாதாரண அகல் விளக்கு 10 மி.லி.,முதல் 100மி.லி.,எண்ணெய் கொள்ளளவு கொண்டவைகளாக தயாரிக்கப்படும். தற்போது சிவன் கோயில்களில் கார்த்திகை அன்று வைப்பதற்காக மெகா சைஸ் அகல் விளக்குகள் தயாராகின்றன.இந்த அகல் விளக்கு ஒவ்வொன்றும் ஒரு லிட்டர் எண்ணெய் கொள்ளளவு கொண்டது. 24 மணி நேரமும் எரியும் வண்ணம் இந்த அகல்விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. காரைக்குடி,பட்டமங்கலம், அரியக்குறிச்சி,திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இந்த அகல் விளக்குகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். தற்போது இவை தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.