பழநியில் கார்த்திகை திருவிழா காப்புக் கட்டுதலுடன் துவக்கம்!
பழநி: பழநியில் நேற்று காப்புக்கட்டுதலுடன் கார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது. பழநி மலைக்கோயிலில் கார்த்திகை திருவிழா நவ.,19 முதல் நவ.,25 வரை நடக்கிறது. நேற்று மாலை 5.30 மணிக்குமேல் சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மாலை 6.35மணிக்கு மூலவர் ஞானதண்டாயுதசுவாமி, சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது.
நவ.,24ல் மாலை 6 மணிக்குமேல் பரணிதீபம் ஏற்றப்படும். நவ.,25ல் பெரிய கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பகல் 2 மணிக்கு மேல் சண்முகார்ச்சனை மற்றும் சண்முகர் தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணி சாயரட்சை பூஜை, முன்னதாக மாலை 4 மணிக்கு நடக்கிறது. சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். மலைக்கோயிலில் நான்கு பக்கத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மாலை 6 மணிக்குமேல் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப் பனை ஏற்றப்படும். இதனால் அன்று இரவு 7 மணி தங்கரத புறப்பாடு கிடையாது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் ராஜ மாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.