உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை தேவசம் போர்டு தலைவருக்கு செம டோஸ்

சபரிமலை தேவசம் போர்டு தலைவருக்கு செம டோஸ்

புதுடில்லி: சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து, சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த, தேவசம் போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, பேஸ்புக் சமூக வலை தளம் வாயிலாக பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மாதவிடாய் போக்கு உள்ள பெண்கள், சபரிமலை செல்ல அனுமதியில்லை. குறிப்பாக, 6 வயது சிறுமியர் முதல், 60 வயது பெண்கள் வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், பெண்கள் மாதவிடாய் காலத்தில், சபரிமலைக்கு வந்து விடக் கூடாது; அவ்வாறு செல்வது, தீட்டு என, காலம் காலமாக நம்பப்படுவது தான்.சபரிமலை அய்யப்பன் கோவிலை கட்டுப்படுத்தும் அமைப்பான, தேவசம் போர்டின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற பரயாறு கோபாலகிருஷ்ணனிடம், சபரிமலைக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்படுவரா? என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மனிதர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய கருவிகள் வந்துள்ளது போல, பெண்களுக்கு மாதவிடாய் போக்கு இருக்கிறதா என்பதை கண்டறிய, விரைவில் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். அதன் பின், பெண்களை சபரிமலைக்கு அனுமதிப்பது குறித்து யோசிக்கப்படும் என்றார். இதை அறிந்த, கேரளா மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள், கடும் கோபம் அடைந்தனர். ஹேப்பி டூ பிளீடு என்ற பெயரில், பேஸ்புக் இணையதளத்தில் பக்கத்தை துவக்கி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கோபத்தை வார்த்தைகளாக வடித்து விட்டனர்.மாதவிடாய் காலத்தில் பெண்கள், சுத்தமாக இருப்பதில்லை என்பதை இவர் அறிந்தாரா அல்லது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடவுளை வணங்கக் கூடாது என, கடவுள் சொல்லியுள்ளாரா? என, பல பெண்கள், தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர். போதாக்குறைக்கு, பல பெண்கள், மாதவிடாய் காலத்தில் அணியும் ஆடைகளையும் காட்டி, கோபால கிருஷ்ணனுக்கு எதிர்ப்பை காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !