நென்மேனி புனித இன்னாசியார் ஆலயத்தில் தேர்பவனி விழா
சாத்தூர் : சாத்தூர் அருகே நென்மேனி புனித இன்னாசியார் ஆலய தேர்பவனி நேற்று அதிகாலையில் நடந்தது. நென்மேனி புனித இன்னாசியார் ஆலயம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 122 ஆம் ஆண்டு திருவிழா சென்ற 22 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அருட்தந்தை ஜெகனிவாசகர் கொடியேற்றினார். ஜூலை 30 தேதி நடந்த விழாவில் "நற்செய்தியின் ஒளியில் இன்னாசியார் வாழ்வும் சான்றும், பற்றி அமிர்தராஜ் சுந்தர் பேசினார். அந்தோணி ராஜன் திருப்பலி நடத்தினார். நேற்று அதிகாலை மூன்று மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான புனித லயாலோ இன்னாசியார் சொரூபம் தாங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதன் பின்னர் காலை எட்டு மணிக்கு பங்கு தந்தை அடைக்கலராஜா, 11மணிக்கு பங்கு தந்தை ஜான் வசந்தகுமார் ஆகியோரின் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. பகல் 12.30 மணிக்கு அருட்தந்தை பால் பிரிட்டோ தலைமையில் நற்கருணை ஆசீர், திருவிழா கொடியிறக்கம் நடந்தது. சாத்தூர் பங்கு தந்தை பிரிட்டோ சுரேஷ், மாண்ட் போர்டு சபை சகோதரர்கள், நற்கருணை ஆராதனை சபை சகோதரிகள், விழாக்குழு, அன்பியங்கள், ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.