உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடல் செங்குளம் கோயில் நகரின் நந்தவனம்!

மதுரை கூடல் செங்குளம் கோயில் நகரின் நந்தவனம்!

அழகான நந்தவனம்... கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமை போர்வை போர்த்தியது போன்ற அற்புத கடம்ப வனம்... (மதுரையம்பதி முன்பு கடம்ப வனம் என அழைக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் ஏழு இடங்களில் கடம்பம் மரங்கள் உள்ளன). கோயில் தேர் செய்ய பயன்படும் எண்ணெய் சத்து மிகுந்த பளபளப்பான இலுப்பை மரங்கள் கொண்ட அடர்ந்த இறைவடிவ வனம்... அதுமட்டுமா? எட்டி, அத்தி, அரசன், நாவல், வேம்பு, ஆல், மகிழம், பராய், வில்வம், மருதம், தென்னை, பனை, விலா, பலா, மா, மூங்கில் என அத்தனையும் பொதிந்து ஓங்கி வளர்ந்த சுற்றுச்சூழல் வனம்.

குட்டி வன ராஜ்யம்: மயில்கள், குயில்களின் ஓசை... மின்மினி பூச்சிகள், பட்டாம் பூச்சிகள், தேனீக்கள், பாம்புகளுக்கு... நடுவே இயற்கை வளங்களை ஒருங்கிணைந்து தன்னகத்தே செறிவூட்டிக் கொண்டிருக்கும் இடம் கூடல் செங்குளம். மதுரையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனத்தில் கூடல் செங்குளம் மிடுக்கான தோற்றத்துடன் வீற்றிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 167 ஏக்கர் பரப்பளவில் ஒரு குட்டி வன ராஜ்யம், அங்கு ஓசையின்றி சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது.

கோசாலை பசுக்கள்: மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில்களான திருவாப்புடையார், முக்தீஸ்வரர், தெப்பக்குளம் மாரியம்மன், திருவாதவூர் கோயில்களுக்கு வழங்கப்படும் பசு மாடுகளை கூடல் செங்குளம் கோசாலையில் வளர்த்து, கன்றுடன் மீண்டும் கோயிலுக்கே அனுப்புகின்றனர். பசும்பால் பாலாபிஷேகத்திற்கும், சாணம் விபூதி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தீவனத்துக்காக கோ 4 ரக புல், சோளம் இங்கேயே விளைவிக்கப்படுகிறது. உவர்ப்பு நீரை சுத்திகரித்து, இயற்கை உர மருந்தை கலந்து சொட்டு நீர் முறையில் விவசாயம் செய்கின்றனர்.

ஆலமர பைனாக்குலர்: வனத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் கழுத்தில் மணி கட்டி விடுவர். அதன் ஓசையை கண்டறிந்து, அவற்றை அழைத்து வருவர். ஆனால் கூடல் செங்குளம் கோசாலை பசுக்களின் கழுத்தில் மணி கட்டுவது கிடையாது. மணி எழுப்பும் ஓசையால் பறவைகள், ஊர்வனங்கள் தங்களின் இயற்கையான தடங்களை மாற்றி விடும் என்பதால், அவ்வாறு செய்வதில்லை. வனத்திற்குள் மேய்ச்சலுக்கு செல்லும் பசுக்களை கண்டறிய, ஆங்காங்கே உயரமான ஆலமரங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் உச்சிக்கு சென்று கண்ணுக்கு எட்டிய துாரத்தில் பசுக்கள் மேயும் இடத்தை கண்டுபிடித்து ஓசை எழுப்பி அல்லது நேரில் சென்று அழைத்து வருகின்றனர்.

ராசி, நட்சத்திர மரம்: இங்கு 12 ராசிகளுக்கும் ஏற்ற சந்தனவேங்கை, எழிலைப்பாலை, பலா, பலரசு, பாதிரி, மா, மகிழம், கருங்காலி, அரசு, தோதகத்தி, வன்னி, ஆல் என 12 ராசி மரங்களும், 27 நட்சத்திரங்களுக்கும் எட்டி, பெருநெல்லி, அத்தி, நாவல், அரசன் உட்பட 27 நட்சத்திர மரங்களும் பத்து ஏக்கர் பரப்பளவில் ஓங்கி வளர்ந்துள்ளன. நட்சத்திர வனத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று 2006 பிப்., 24ல் அரச மரம் நடப்பட்டது. தற்போது பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி, அவரவர் ராசி, நட்சத்திரத்தின் பெயரில் மரங்களை வளர்க்கும் சேவையும் நடக்கிறது.

வன சுற்றுச்சூழல்: மதுரை அழகர்கோவில் மலையை தவிர வன சுற்றுச்சூழல் தலம் இல்லை. கூடல் செங்குளத்தை வன சுற்றுச்சூழல் தலம் மற்றும் சுற்றுலாத்தலமாக மாற்றும் நடவடிக்கையை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் முடுக்கியுள்ளது. இதற்காக மூலிகை வனம், தேனீ வளர்ப்பு, 5000 பனை, 600 தென்னை, 2500 பல வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரையின் முதல் வன சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக மாற்றப்படவுள்ளது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தொடர்புக்கு 90808 88244.

மதுரையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனத்தில் கூடல் செங்குளம் மிடுக்கான தோற்றத்துடன் வீற்றிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 167 ஏக்கர் பரப்பளவில் ஒரு குட்டி வன ராஜ்யம், அங்கு ஓசையின்றி சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !