காணிக்கை எண்ணும் இடத்தில் போலீசின் டிரஸ்கோடு மாற்றம்
சபரிமலை :சபரிமலையில் காணிக்கை எண்ணும் இடத்தில் போலீசின் டிரஸ்கோடு மாற்றப்பட்டது. இனி இவர்களும் வேட்டி அணிந்துதான் செல்ல வேண்டும்.சபரிமலையில் காணிக்கை எண்ணும் இடத்தில் உள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் வேட்டி, துண்டுதான் அணிய வேண்டும். உள்ளாடைகள் அணியக்கூடாது. இப்படி கடுமையான விதிகள் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு உண்டு. இந்நிலையில் கடந்த ஆண்டு மகரவிளக்கு முடிந்த பின்னர் உண்டியல் பணம் திருடியதாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பாதுகாப்புக்காக போலீசை நியமிக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 20 போலீசார் இங்கு ஷிப்ட் முறையில் நியமிக்கப்பட்டனர். ஆனால் போலீசார் தங்களின் பேன்ட், சட்டை என வழக்கமான சீருடையில் சென்றனர். இது இரண்டு விதமான உரிமையா? என்ற கேள்வி எழுந்தது. தேவம்போர்டு ஊழியர்கள் வேட்டி-துண்டு அணிந்து செல்லும் போது போலீஸ் மட்டும் இப்படி வரலாமா? என்ற கேள்வி எழுந்தது.இதுபற்றி தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஐகோர்ட் நியமித்துள்ள தனி அதிகாரி பாபுவும் இதில் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் படி காணிக்கை எண்ணும் இடத்தில் பணிபுரியும் போலீசாருக்கு தேவசம்போர்டு சார்பில் வேட்டி, துண்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.இன்று முதல் காணிக்கை எண்ணும் இடத்தில் போலீஸ் வேட்டி அணிந்து பணியில் இருப்பர்.