உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் தேருக்கு ரூ.12 லட்சத்தில் ஹைட்ராலிக் சக்கரங்கள்!

அழகர்கோவில் தேருக்கு ரூ.12 லட்சத்தில் ஹைட்ராலிக் சக்கரங்கள்!

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தேருக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்பில் "ஹைட்ராலிக் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. அழகர்கோவில் சுந்தரரராஜ பெருமாள் கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட தேர் உள்ளது. தேரில் மரத்தாலான சக்கரங்கள் உள்ளன. இதில் வெளிப்பகுதியில் மட்டும் இரும்பு ராடுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களின் உட்பகுதிகள் சேதம் அடைந்துவிட்டன. தேரோடும் வீதி மண் ரோடாக இருந்தது. சக்கரமும் முறையாக இல்லாததால் பக்தர்கள் தேரை இழுக்க மிகவும் சிரமம் அடைந்தனர். மழை பெய்துவிட்டால் அவ்வளவுதான். பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் சக்கரம் மற்றும் தேரோடும் பாதையை மாற்றி அமைக்க கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதன்படி தேர் நிலையில் இருந்து ஒரு கி.மீ., நீளத்திற்கு சுற்றுலா வளர்ச்சித் துறை நிதி மூலம் ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கப்படுகிறது. திருச்சி பெல் நிறுவனத்தில் கோயில் நிதி 12 லட்சம் ரூபாய் மதிப்பில், எட்டு டன் எடையில் நான்கு சக்கரங்கள் செய்யப்பட்டன. வரும் ஆக., 13ம் தேதி தேரோட்டம் நடக்க இருப்பதால் அதற்குள் பொருத்தித் தரும்படி கோயில் நிர்வாகத்தினர் கேட்டனர். அதைத் தொடர்ந்து சக்கரங்கள் கொண்டுவரப்பட்டு ராட்சத இயந்திரங்கள் மூலம் பொருத்தப்பட்டன. இந்த சக்கரங்கள் "ஹைட்ராலிக் முறையில் இயங்குவதால் தேரை இழுப்பதற்கு பக்தர்கள் சிரமம் அடைய வேண்டியதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !