சமயபுரம் கோவிலில் பக்தர்கள் தங்குவற்காக ரூ.6.60 கோடியில் மண்டபம்!
திருச்சி: சமயபுரம் கோவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தங்கிட, 6.60 கோடி ரூபாயில், 53,400 சதுரடி பரப்பளவில், புதிதாக மாரியம்மன் மண்டபம் கட்டப்பட்டு, முதல்வர் திறந்து வைக்கத் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்திலுள்ள அம்மன் கோவில்களில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாகும். நாள்தோறும் வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இக்கோவிலில் மகா கும்பாபிேஷகம் நடத்தும் பொருட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
மூன்று கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கோவில் வளாகத்தில், பக்தர்கள் தங்குவதற்காக, 6.60 கோடி ரூபாயில் மாரியம்மன் மண்டபம் கட்டியுள்ளனர். இரண்டு தளங்களுடன் கூடிய இந்த மண்டபம், தலா, 26,200 சதுரடி பரப்பளவு கொண்டு உள்ளன. ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் தங்கும் வசதியும், கழிவறை, குளியல் அறை வசதிகளைக் கொண்டு உள்ளன. கட்டுமான பணிகள், பூச்சு வேலை மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. தவிர, கோவிலில் தெற்கு கோபுரம் அருகில் இரண்டு கோடி ரூபாயில், தரைப்பகுதியில் மண் கொட்டி மேடாக்கி, வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை போடப்பட்டு உள்ளது. கோவிலின் அருகிலுள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக, ஒரு கோடி ரூபாயில், 30 மீ., அகலம், 50 மீ., நீளம் கொண்ட செட் அமைத்துள்ளனர். பணிகள் முடிந்துள்ளதால் மாரியம்மன் மண்டபத்தை, வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என, கோவில் இணை ஆணையர் தென்னரசு தெரிவித்தார்.