நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் திருப்பணி
பாபநாசம்: பாபநாசம் கிழக்கில் உள்ள நல்லூர் ஸ்ரீகல்யாண சுந்தரேசுவரர் கிரிசுந்தரி கோவிலில் கடந்த ஓராண்டாக திருப்பணி நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று திருப்பணியை நிறைவுசெய்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்று இறைவன் அருள்பெற திருவாவடுதுறை ஆதின குருமகா சன்னிதானம் அழைப்பு விடுத்துள்ளார். பாபநாசம் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் பாபநாசம் -வலங்கைமான் ரோட்டில் உள்ளது நல்லூர் கோவில். இது ஏழாம் நூற்றாண்டு மாடகோவிலாகும். திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற ஸ்தலம். கோபுரம் எதிரில் தீர்த்த குளம் இரண்டு பெரிய பிரகாரங்களையும் மதிற்சுவர்களையும் கொண்டது. மூர்த்தி தலம், தீர்த்தம் ஆக்கல், அருளல் ஆகியவற்றல் சிறப்புமிக்கது. திருமணபேறு, உத்யோக பேறு, குழந்தை பேறு வழங்கக்கூடியது.
* கைலாயம் கண்ட பெருமை: கைலாயம் சென்று சிவனை காணமுடியாதவர்கள் நல்லூர் வந்து இதன் கைலாய விமானத்தை தரிசித்தாலே கைலாயத்தை கண்ட புண்ணியம் உண்டு என புராண வரலாறு கூறுகிறது.
* திருவடி தீட்சை: திருநாவுக்கரசருக்கு சிவப்பெருமான் தன்னுடைய திருவடியை அவருடைய தலையில் வைத்து தீட்சை தந்த ஸ்தலம். இதனால் தான் இங்குவரும் பக்தர்களுக்கு சிவபெருமான் பாதம் பதித்த (கிரீடம்) வைத்து அருளாசி வழங்கிறார்கள்.
* கருவறை சிவலிங்கம்: கருவறை சிவலிங்க பானம் (குழவி) இன்ன நிறம் என்று சொல்லமுடியாத நிறத்தில் தானாக தோன்றியது. ஒரு நாளைக்கு பகல் பொழுதில் 5 நிறங்களை காட்டும் பெருமையுடன் விளங்குகிறது. சிவலிங்க ஆவுடையாரில் அகத்தியருக்கு ஒரு பானமும், சிவனுக்கு ஒரு பானமும் இருக்கிறது. அதனால் ஒரே நேரத்தில் சிவனையும், அகத்தியரையும் தரிசிக்கும் பேறு கிடைக்கிறது. அம்பாள் பெயர் கிரிசுந்தரி, சொக்கிமலை என்ற சிறப்பு பெயரும் உண்டு. ஆளுயுர கருங்கல் திருமேனியுடன் தெற்கு பார்த்து அருளாட்சிபுரிகிறார். அன்னையின் முகத்தை நோக்கிய உடனே பக்தர்களுக்கு ஒரு பரவசம் கிடைக்கிறது. அருகிலேயே பள்ளியறை மற்றும் துலாபாரம் கொடுக்கும் மேடை உள்ளது. கோவிலில் பக்தர்கள் நேர்த்தி கடனாக பிராத்தனை செய்து கொண்டு தங்களது எடைக்கு எடை நாணயம், வெல்லம், அரிசி, நெய் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம்.
* சப்த சகாரம்: சப்த சகாரம் என்றால் ஏழு கடல்களை குறிக்கும். இங்குள்ள தீர்த்த குளத்திற்கு சப்த சாகரம் என்று பெயர். குந்திதேவி சிவபெருமானிடம் நான் ஒரே நேரத்தில் ஏழு கடல்களிலும் நீராட வேண்டும் என வேண்டி கொண்டார். அதன்படி, நல்லூர் குளத்தில் ஏழு கடல்களின் நீரும் வந்து கடக்கும்படி அருள் செய்தார். இதில் குந்திதேவி மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் குளித்து நீராடி மோட்சம் அடைந்தார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நீராடி வருகிறார்கள். மாசி மாதத்தில் 15 நாள் திருவிழாவும் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் அமர்நீதி நாயனாரின் துலாபார நிகழ்ச்சியும் பெருவிழாவாக நடக்கிறது. இது ஓர் அரிய காட்சியாகும். பக்தர் அவ்வப்போது சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தி மகிழுகிறார்கள்.இங்குள்ள வில்வ மரத்தடியை சுற்றிலும் ஏராளமான நாகர்கள் உள்ளது. இதற்கு மஞ்சள், பால், தயிர் அபிசேகம் செய்து மஞ்சள் நூல்கட்டி பொங்கல் படைத்து நாகதோஷம் விலக பூஜை நடத்துகிறார்கள். இங்குள்ள சதுர தாண்டவ நடராஜர் (பஞ்சலோகம் ) உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆறுகால பூஜை நடக்கிறது. திருவாதிரை நாளன்று நடராஜர் சப்த சாகரத்தில் தீர்த்தவாரி நடப்பது சிறப்பான நிகழ்ச்சியாகும்.
* அஷ்ட பூஜ மகாகாளி: மிகவும் சக்தி வாய்ந்த அன்னை. வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் இராகுகால பூஜை அபிஷேகத்துடன் நடக்கிறது. ஆடி மாதம் முழுவதும் தினந்தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை பால்குடம் காவடி எடுத்து பெருவிழா கொண்டாடுகிறார்கள்.பழமையான புகழ்பெற்ற இக்கோவில் திருப்பணிகள் முடிந்து விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.