திருக்கோஷ்டியூரில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று பகல் பத்து உற்சவம் துவங்கியது. இக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி உற்வச விழா 21 நாட்கள் நடக்கும். நேற்று முன்தினம் மாலை பெருமாள் ஆண்டாள் சந்நிதியில் எழுந்தருளிய பின், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமிகள் ஆஸ்தானம் சென்றடைந்த பின், பகல் பத்து உற்சவம் துவங்கியது. தினமும் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். பத்தாம் நாளன்று இரவு 7 மணிக்கு பெருமாள் மோகனா அலங்காரத்தில் ஆண்டாள் சன்னிதியில் காட்சி அளித்த பின் பகல் பத்து உற்சவம் நிறைவடையும். டிச.21ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 10 மணிக்கு ஏகாதசி மண்டபத்தில் சயன கோலத்தில் உற்சவ மூர்த்தி பெருமாள் எழுந்தருள்வார். அன்று இரவு 7 மணிக்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பார். இரவு 10:30 மணிக்கு பரமபத வாசலில் பெருமாள் எழுந்தருள்வார். தென்னைமர வீதி உலாவந்து தாயார் சன்னதியை அடைவார். மறுநாள் இரவு பத்து உற்சவம் துவங்கும். தினமும் மாலை 6:30 மணிக்கு பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் திறக்கப்படும். டிச.,30ல் அரண்மனை மண்டகப்படியுடன் இரவு பத்து உற்சவம் நிறைவு பெறும்.