ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா அலங்கரிக்கும் பணி துரிதம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், வரும், 21ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்காக, பரமபத வாசலின் முன் பந்தல் அமைத்து, அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த, 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வரும், 20ம் தேதி மோகினி அலங்காரமும், 21ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்காக மூலவர் சன்னிதியில் இருந்து, பரமபத வாசல் வழியாக, ஆயிரங்கால் மண்டபம் வரையிலும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலை பூக்களால் அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ரங்கா ரங்கா கோபுரம், தாயார் சன்னிதி ஆகிய இடங்களில் பக்தர்கள் வந்து செல்லவும், தரிசனம் மேற்கொள்ள பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை, மார்கழி மாதம் முதல் நாளை முன்னிட்டு, ஆண்டாள் சன்னிதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருப்பாவை வாசிக்கப்பட்டது.