ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கேயிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா காலை 7மணிக்கு நடந்தது. காலை 5 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள், ரகு பட்டர் தலைமையில் பட்டர்கள் செய்தனர்.
காலை சரியாக 7மணியளவில் பெரியபெருமாள் சங்கு சக்கர கவசமணிந்து, ஆண்டாள் ரெங்கமன்னாருடன் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். அங்கு பெரியாழ்வார் உட்பட ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்தனர். பக்தர்களின் கோவிந்தா, கோபாலா சரணம் முழங்க, மாடவீதிகள் வழியாக வடபத்ரசயனர் சன்னதியில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். திருவாய்மொழி, அரையர் வியக்யானம் நடந்தது. இதனை தொடர்ந்து டிச.30ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது. விழாவில் மணவாள மாமுனிகள் ஜீயர் சுவாமிகள், முத்துபட்டர், அனந்தராமகிருஷ்ணபட்டர், சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் செந்தில்குமாரி, தாசில்தார் அன்னம்மாள், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், தக்கார் ரவிசந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் முத்துராஜ், செயல்அலுவலர் ராமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.