சிவகங்கை கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
சிவகங்கை: சிவகங்கை பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள், பரமபதவாசலில் எழுந்தருளினார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேம்பத்தூர்: சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலை 5:30 மணிக்கு சீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் பரமபதவாசலில் எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு, கருடசேவையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். கல்லூரணி: திருப்பாச்சேத்தி அருகே கல்லூரணி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்புவனம் அருகே கொந்தகை பெருமாள் கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு சீதேவி, பூதேவியருடன் பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
*திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.இக்கோயிலில் நேற்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன்உற்சவ பெருமாள் எழுந்தருள, காலை 9.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பிரகார வலம் வந்தனர்.மாலையில் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவில் பெருமாள் திருவீதி உலா நடந்தது.