1,000 ஆண்டு பழமையான மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்!
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமையானது. பழமையை பறைசாற்றும் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா, 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்றுமுன்தினம் யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் பங்கேற்றனர். நேற்று காலை 7:35 மணிக்கு, அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளினார். காலை, 10.25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. கூனம்பட்டி ஆதினம், மாணிக்கவாசக சாமிகள், அருணை அருள்முருக அடிகள், எம்.எல்.ஏ., கருப்பசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கினர். மன்னீஸ்வரர் தேருக்கு முன்னதாக, 22 அடி உயரத்தில், 10 லட்சம் ரூபாயில் புதிதாக செய்யப்பட்ட விநாயகர் தேர் சென்றது. தேரோட்டத்தில், செண்டை மேளம், கயிலை வாத்தியம், ஜமாப் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. வாண வேடிக்கையும் நிகழ்த்தப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன், தேரை நோக்கி, பழங்களை வீசினர். தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக மாலை, 5:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பல்வேறு அமைப்பினர், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருமுருகன் அருள்நெறிக்கழகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.