அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 11ம் ஆண்டு ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.ஆடித் திருவிழா, 26ம் தேதி காலை 6 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 108 பால் குடம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 31ம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடந்தது. தினசரி காலை, மாலை என இரு வேளையும் அம்மன் கரகம் வீதியுலா வந்தது.இறுதி நாளான நேற்று முன்தினம் வாண வேடிக்கையுடன் அம்மன் திருவீதியுலா நடந்தது. விழாவையொட்டி உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தினசரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் பலர், தங்களது உடலில் அலகுகள் குத்தி, தங்களது நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர். இவ்விழாவில் புட்லூர், ராமாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக் குழுத் தலைவர் மகேஷ், மனோகரன், ராஜசேகரன் தலைமையில், விழாக் குழுவினர் செய்தனர்.