உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, 700 ஆண்டு பழமையான ஒய்சாள மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ளது அத்திமுகம் கிராமம். இங்கு பழமைவாய்ந்த ஐராவதீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகம், தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. கோவில் சண்டேசர் சன்னதிக்கு அருகே தோண்டும்போது, ஒரு கல்வெட்டு காணப்பட்டது. இதை கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அத்திமுகம் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, ஒய்சாள மன்னர் ராமநாதனுடையது ஆகும். இந்த கல்வெட்டு, 700 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த கல்வெட்டு வாயிலாக, இந்த கோவில் சோழர்களால் கட்டப்பட்டது என்பதும், இந்த கோவில் அப்போது அழகிய சோழீசுவரம் என அழைக்கப்பட்டதும் தெரியவருகிறது. இந்த கல்வெட்டு, குறுவேந்த வம்சத்து முரசு நாடாள்வான் மகன் தர்மத்தாழ்வாரான பூர்வதராயன் என்பவன் கோவிலுக்கு அளித்த நில தானத்தை குறிப்பிடுகிறது. அத்துடன் இந்த கல்வெட்டு ஒய்சாள மன்னர் ராமநாதனின், 60வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !