ஆருத்ரா தரிசனம்: சந்தனம் கலைத்தார் உத்தரகோசமங்கை மரகத நடராஜர்!
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி, மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, மரகத நடராஜருக்கு நேற்று மகா அபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இக்கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலம். இங்குள்ள பச்சை மரகத நடராஜர் சிலை பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் நடக்கும்.இவ்விழா டிச.,17ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதற்காக காலையில், அவரது திருமேனியில் பூசப்பட்டிருந்த சந்தனம் களையப்பட்டது. தொடர்ந்து 18 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது. சந்தனாதி தைலம் பூசப்பட்டு, தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இரவு மீண்டும் மகா அபிஷேகம் நடந்தது. அதுவரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.இந்த அபூர்வ நிகழ்வை பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசித்தனர்.
அதே நேரத்தில் கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமாள் காட்சி தந்தார். இன்று அதிகாலை மரகத நடராஜரின் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூத்தர் பெருமாள் திருவீதி உலா, மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.