உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் பொங்கல் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் பொங்கல் விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள், பால்குடம், தீர்த்தம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பொங்கல் வைபவம் வரும், 30ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முதலே அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல், தீர்த்தக் குட ஊர்வலம் தொடங்கி விட்டது. வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீதியை சேர்ந்தவர்களும், தனித்தனியாக காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து கோவில் கம்பத்துக்கு ஊற்றினர். அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பறவை காவடி, திருவாச்சி, வேல், நாக்கு அலகுகள் குத்திய பக்தர்கள், கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இரவு வரை தீர்த்த குடங்கள் சுமந்து ஏராளமானோர் வந்தனர். இதனால் காவிரி ஆறு, கருங்கல்பாளையம், பவானி ரோடு, சக்தி ரோடு, கோவில் வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், திருவிழா கூட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும், வீரப்பன்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !